மன வாசனை

"மீனா!நான் 'வாக்கிங்' போய்ட்டு 

இருட்டறதுக்குள்ளே வந்துடறேன்!கடையில் ஏதாவது வாங்கிண்டு வரணுமா?"_என்றார் சுந்தரேசன்.


"உங்களுக்கென்ன!சாயங்காலம் டிஃபன் காபி சாப்பிட்டாச்சு!ஜாலியா பார்க்குக்கு போய் உங்களை மாதிரி 'ரிடையர்' ஆனவாள்ளாம் சேர்ந்துண்டு பழங்கதை புதுக்கதை எல்லாம் 

பேசி ஜாலியா அரட்டை அடிக்கறேள்!நான் ராத்திரி என்ன டிஃபன் பண்ணலாம்னு யோசனை பண்ணவேண்டியதா இருக்கு!"_என்றாள் மீனாட்சி.


"மீனா! சமையல் பண்ண ஒரு மாமியை வச்சுக்கோன்னு நானும் பசங்களும் நாலு வருஷமா சொல்லிண்டிருக்கோம்.பணமா இல்லை?"


" எதுவும் முடியுற மட்டும் பண்ணனும்!"


"எல்லா விஷயத்திலும் தானே?"


"அட ராமா!நல்ல வேளை!பெண்ணும் பையனும் கல்யாணம் ஆகி போயிட்டா!கிருஷ்ணா ராமான்னு சொன்னா போற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்!வயசான காலத்துல இதென்ன பேச்சு?"


"மீனா!நான் வித விதமா டிஃபன் பண்றதைச் சொன்னேன்.நீ வேற ஏதோ நினைச்சுண்டா நான் பொறுப்பில்லை!"


"உங்க மனசுல என்ன இருக்குன்னு 

எனக்குத் 

தெரியாதாக்கும்!"


"மீனா!ஒருத்தர் மனசில் நினைக்கறது இன்னொருத்தருக்கு எப்படி தெரியறது?"


" பகவானைத் தான் கேட்கணும்!நாம் அன்னியோன்னியமா இருக்கறதால் தெரியறதோ என்னமோ!'ஈருடல் ஓருயிர்'னு சொல்லுவா..."


"ஓர் உடல் ஆகும்போது தானே 'உயிர்' என்பதே உண்டாகிறது!எல்லா தம்பதிகளும் அப்படி தானே இருப்பா?"


"இரண்டுபேர் மனசும் சேரணும்! அது பகவானிடம் தான் இருக்கு!ஆனா சுலபமா கண்டுபிடிக்கலாம்!"


"எப்படி?"


"மனைவி முகத்துல மகிழ்ச்சி இருந்தா அவா அன்னியோன்யமா இருக்கான்னு அர்த்தம்!"


"கணவன் அக்கறையோடு இருக்கறதாலே தானே மனைவி மகிழ்ச்சியா இருக்கா?அதே அக்கறை மனைவிக்கும் இருந்தா தானே கணவன் மகிழ்ச்சியா இருக்க முடியும்?"


"எல்லா பெண்களும் கணவனை மேல் உயிரா தான் இருக்கா!ஆண்களைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது!உங்க மனசு கடல் மேல் கப்பல் அலை பாயறது போல் எப்பவும் அலைபாயும்!மனைவி தான் நங்கூரம் மாதிரி உங்க மனசையும் நிறுத்தணும்!"


"மீனா!எத்தனை அருமையா பேசறே! அப்படின்னா ஆண்கள் ஏன் சன்னியாசியா போகணும்?"


"பொறுப்பை தட்டிக் கழிக்க தான் குடும்பத்தை தவிக்க விட்டு சன்னியாசியா போறா!எந்தப் பெண்ணாவது குடும்பத்தை விட்டுட்டு சன்னியாசியா போனதா சேதி உண்டா?கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க சொன்னதால் தானே நான் பார்த்துண்டிருந்த பேங்க் வேலையை விட்டேன்?"


"மீனா!வேலையும் பார்த்துண்டு பசங்களையும் ஒழுங்கா கவனிச்சுக்கறது எத்தனை கஷ்டம் தெரியுமா?நீ சின்ன வயசுலேயே நம் பசங்களுக்கு பொறுமையா சொல்லிக்கொடுத்து நல்ல ஃபௌண்டேஷன்

போட்டதால் தானே அவா இப்போ ஓஹோன்னு இருக்கா?"


"நம் முயற்சின்றது இருந்தாலும் எதுவுமே அவா அவா தலையெழுத்து படி தான் நடக்கும்!"


"மீனா!தலையெழுத்து ப்படியே எல்லாம் நடக்கும்னா எதுக்காக முயற்சி பண்ணனும்?"

 

"ஒரே டீச்சர் தான் பாடம் நடத்தறார். ஆனா எல்லா பசங்களும் ஒரே மார்க் வாங்கறதில்லை!அதுக்காக வகுப்புக்கே 

போகாம இருந்தா பாடம் எப்படி தெரியும்?

 விதைச்சா தானே அறுவடை செய்யமுடியும்?நன்ன படிச்சா போறுமா?சரியா படிக்காதவன் பெரிய பிஸினஸ் பண்றதும் பிரமாதமா படிச்சவா அதில் வேலைக்குச் சேர்ந்து அவன்கிட்ட  

சம்பளம் வாங்கறதும் நாம் பார்க்கலையா?ஒருவன் புத்தி அவன் கர்மாவுக்கு தகுந்த மாதிரி தான் 

போகும்!"


"மீனா!அதைக் கண்டுபிடிக்க 

தான் ஜோஸ்யம்னு ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காளா?"


"இருக்கும்!மாத்த முடியாததை தெரிஞ்சுண்டு என்ன ஆகப்போறது?"


"அப்படின்னா கல்யாணம் பண்றவா

ஏன் பொருத்தம் பார்க்கறா?"


"ஆண் பெண் ரெண்டு பேரும் சேர்ந்து வாழும்போது ரெண்டு 

பேருக்கும் ஒரே நேரத்துல கஷ்டகாலம் வராம இருக்க தான் பொருத்தம் பார்க்கறா!"


"மீனா!இத்தனை அழகா சொல்லறையே!ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்!"


"என்ன?"


"எத்தனையோ பேரைப் பார்த்தாலும் ஆண்_பெண் இரண்டு பேர் மனசிலும் ஒரே நேரத்தில் காதல் ஏற்படுத்தும் சக்தி எது?"


"நமக்கு கல்யாணம்

பண்ணி வச்ச அதே சக்தி தான்!

"பேசிட்டே இருந்தா இங்கேயே இருட்டிடும்!"


"மீனா!மனசில் இருந்த இருட்டு போன மாதிரி இருக்கு!"


"பர்ஸ் செல்ஃபோன்

ரெண்டும் ஞாபகமா 

எடுத்துக்குங்கோ! பர்ஸ்ல ரூபா இருக்கான்னு பார்த்துக்குங்கோ!அது கூட நான் தான் சொல்லணும்!இருட்டறதுக்குள்ளே வந்துடுங்கோ!"


"மீனா! பேச்சு ஸ்வாரஸ்யத்துல நேரம் போறதே தெரியலை.நேத்து ராகவன்னு ஒருத்தர் எங்களோட சேர்ந்துண்டார்.ஏதோ பேங்க்ல இருந்து ரிடையர் ஆனாராம்.திருநெல்வேலியில் கூட இருந்திருக்கார்.கல்யாணத்தின் போது நீ திருநெல்வேலில தானே வேலை பார்த்துண்டு இருந்தே!நான் வரேன்"


சுந்தரேசன் போய்விட்டார்.


'என்னிடம் காதலைச் சொன்ன ராகவனா?இருக்காது!ஆனால் 

காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிந்ததும் அவர் முகத்தில் தெரிந்த துயரம்!இத்தனை வருஷங்கள் 

ஆனாலும் ஏன் அது மறக்கவில்லை?'


மீனாவின் மனக்கடலில் எண்ண அலைகள் அடிக்க ஆரம்பித்தது.

"ராகவன்" என்ற ரிடையரான பெரியவர் மாலை நேரத்தில் பூங்காவில் அரட்டையடிக்கும் குழுவில் சேர்ந்து கொண்டார் என்று சுந்தரேசன் சொன்னதும் மீனாட்சியின் மனம்

ரம்யாவைப் பற்றி தான் எண்ணியது...


'ராகவன் மதுரைக்கு மாற்றல் வாங்கிப் போனதும் ரம்யாவும் மதுரைக்கு மாற்றல் 

வாங்கிப் போய்விட்டாள்.


'ரம்யாவுக்கு தான் ராகவன் மேல் எத்தனை காதல்!அதை பலவிதமாக அவள் வெளிப்படுத்தினாலும் ராகவனுக்கு ஏன் புரியவில்லை?அவன் மனம் என்மேல் இருந்ததாலா?அதனால் தானே நான் காதலை ஏற்க மறுத்ததும் ராகவன் "ட்ரான்ஸ்பர்" வாங்கிப் போய்விட்டார்?'


மீண்டும் ராகவனின் சோகமான முகம் மீனாட்சி மனதில் தோன்றி மனதை வாட்டியது!


'அவர் என்னைக் காதலித்தால் எனக்கும் காதல் வரவேண்டுமா?'


'பழம் தானாகக் கனிவது போல் காதலும் கனியவேண்டும்!'


'காதல் எப்படி தோன்றுகிறது?'_ என்று எண்ணிப் பார்த்த மீனாட்சிக்கு "முன் ஜென்ம வாசனை" தான் காரணம் என்று தோன்றியது.


'நமக்கு நிறையப் பிறப்புகள் உண்டு'_ என்று புராணங்கள் சொல்லும் போது முற்பிறவியில் நம்முடன் வாழ்ந்தவர் நம்முன்

வேறு உருவில் தோன்றினாலும் மனதுக்கு தெரிந்துவிடுகிறது!அதனால் தான் பழகாதவராக இருந்தாலும் பார்த்தவுடன் மனம் 

நேசிக்கிறது!'


'ராகவனுக்கு என்மேல் வந்த காதல் எனக்கு ஏன் வரவில்லை?'


'எல்லோர் மனதிலும் பழைய வாசனை இருக்காது'_மீனாட்சி தன்னைத் தானே 

சமாதானம் செய்துகொண்டாள்.

'இப்போது ரம்யா எங்கிருப்பாள்?அவள் காதலித்த ராகவனையே கல்யாணம் பண்ணிக்கொண்டாளா?அது எப்படி முடியும்?ராகவன் மனம் மாறியிருக்குமா?'


 'அத்தனை நெருக்கமாய் இருந்த ரம்யாவின் தொடர்பு எப்படி எப்போது விட்டுப் போனது?வாழ்க்கையின் ஓட்டத்தில் நம் கூட ஓடி வருபவர் பற்றி தான் மனம் நினைக்கிறது.நம் மனம் மகிழ நம்மோடு பழகியவர்களை நினைத்துப் பார்க்க 

நேரம் ஏது?


'வாழ்க்கை என்னும் வண்டியில் நாம் பயணம் தான் செய்கிறோம்!ஓட்டுவது யார்?உடன் வருவது யார்?எந்தெந்தக் காட்சிகள் காண்போம்?'


'யாருக்குத் தெரியும்?'


பலவிதமான சிந்தனையில் மீனாட்சியின் மனம் 

குழம்பியது.


சூடாகக் காபி கலந்து

சாப்பிட்டதும் ஆறுதலாக இருந்தது.


கணவர் சுந்தரேசன்

எப்போது வருவார் என்று ஆவலுடன் காத்திருந்தாள் மீனாட்சி!

மனம் எழுபது வயதிலும் தேவையில்லாதவற்றை எண்ணி அலைபாய்வது மீனாட்சிக்கு வியப்பாக இருந்தது.


இத்தனை நாள் ராகவனையும் ரம்யாவையும் நினைத்துப் பார்த்தோமா? இப்போது "ராகவன்" என்ற பெயரைக் கேட்டதுமே மனதில் புதைந்திருந்த நினைவுகள் அனைத்தும் எப்படி வெளியே வந்து ஆவலைத் தூண்டுகின்றன!


மனதில் புதைந்திருப்பவை எவையென்றும் அவை

எப்போது தோன்றும் என்றும் யாரால் சொல்லமுடியும்!

'உண்மையில் எண்ணம் தான் உணர்ச்சிகளுக்குக் காரணம்!'_என்று தோன்றியது.


'மனதில் தோன்றும் எண்ணம் தானே வார்த்தையாகி பின்பு செயலாகவும்

ஆகிறது!மனதில் பலவித எண்ணங்கள் ஏற்படுத்தி அதன்மூலம் பகவான் மனிதனை இயக்குகிறார்!'


இந்த எண்ணம் தோன்றியதும் மீனாட்சியின் கைகள் தாமாகக் குவிந்து அம்பாளை 

வணங்கியது.


"நீ நினைத்தால் ஆகாதது உண்டோ?"_ என்ற பாடல் நினைவுக்கு வந்தது.


மீனாட்சி நினைவை நிறுத்திவிட்டு பக்தி டி.வி.யில் பாடல் கேட்க ஆரம்பித்தாள்.


மணி 6


பூஜையறையில் விளக்கு ஏற்றி பால் காய்ச்சி நெய்வேத்யம் செய்தாள்.


வாசலுக்கு வந்து பார்த்தபோது தூரத்தில் சுந்தரேசன் வந்துகொண்டிருந்தார்.


கூடவே வயதான ஆணும் பெண்ணும்!


மீனாட்சியின் மனம்

படபடத்தது!


ராகவன் தானா?


அதற்குள் அருகில் வந்துவிட்டனர்.


ராகவன் இல்லை!


"மீனா!இவர் ரங்கனாதன்!இது அவர் 'ஒய்ஃப்' ராதா! இது ஏன் 'ஒய்ஃப்' மீனாட்சி!


சுந்தரேசன் அறிமுகம் செய்து வைத்தார்.


"வாங்கோ!வாங்கோ!ரொம்ப சந்தோஷம்!"_ மீனாட்சி வரவேற்றாள்.


எல்லோரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.


"காஃபி சாப்பிடுறீங்களா?"_மீனாட்சி


"இவருக்கு மட்டும் அரை டம்ளர் சர்க்கரை கம்மியா குடுங்க மாமி!ராத்திரி ஒரு மணிக்கு கூட குடிப்பார்!"


"வேற எந்த கெட்ட பழக்கமும் இல்லை!"_ரங்கன்.


"ரங்கா!அதை உன் ஒய்ஃப் தான் சொல்லணும்!"_சுந்தரேசன் சொன்னதும் எல்லோரும் சிரித்துவிட்டனர்.


"இப்படி கலகலப்பாக பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா மாமி?ஆண்கள் எல்லாம் வெளியில்

போறதால் ஒண்ணா சேர்ந்துடறா! நாம் தான் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கறோம்."_ராதா


"ராதா! அதான் நீ கேட்டபடி என் ஃப்ரண்ட்ஸ் ஆத்துக்கு அழைச்சுண்டு போறேனே!நேத்து கூட புதுசா வந்த ராகவன் ஆத்துக்குப் போனோமே..."


மீனாட்சிக்கு நெஞ்சு படபடத்தது.


'அதே ராகவன் தானா?'


"ஆமாம் மாமி! அவர் 

'ஒய்ஃப்' ரம்யா உங்களை மாதிரியே அன்பா பழகறா!"

மீனாட்சி திடுக்கிட்டாள்!


ராகவன் என்னைக் காதலித்ததை கணவர் சுந்தரேசனிடம் சொல்லியிருந்தால்?அவர் தான் என் கணவர் என்று ராகவனுக்கு தெரியாதே!'


"அந்த மாமி திருநெல்வேலி 'ப்ரான்ச்'ல ஒர்க் பண்ணியிருக்காளா?நானும் கல்யாணத்துக்கு முன்னால 'பேங்க்'ல

ஒர்க் பண்ணியிருக்கேன்.என் கூடவும் ரம்யா ராகவன்னு ரெண்டு பேர் 'ஒர்க்' பண்ணா!"


"மாமி!நீங்க சொல்றதைக் கேட்கும்போது நிச்சயம் அவாளா தான் இருக்கும்!நாம் இப்படி கலந்து பேசும்போது எத்தனை நெருக்கமா வந்துடறோம் பார்த்தீங்களா?அந்த மாமியோட ஃபோன் நம்பர் இருக்கு!தரட்டுமா?"


"ரொம்ப தேங்க்ஸ்!குடுங்கோ!"_ மீனாட்சி ரம்யாவின் ஃபோன் 

நம்பர் வாங்கிக் கொண்டாள்.


ரங்கனும் ராதாவும் புறப்பட்டுச் சென்றதும் மீனாட்சி ஏதோ பரபரப்புடன் இருப்பது சுந்தரேசனுக்குத் தெரிந்தது.


"மீனா!உன் ஃப்ரண்ட் காதல் கல்யாணம் பண்ணின்டதே உனக்கு இத்தனை சந்தோஷமா?நாளைக்கே அவாளைப் பார்க்கப் போகலாம்.இப்போ ஃபோன் பண்ணிப் பேசு!நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்!"


சுந்தரேசன் உள்ளே சென்றுவிட்டார்.


மீனாட்சி செல்போனை 

எடுத்தாள்.

மீனாட்சி ரம்யா நம்பருக்கு ஃபோன் செய்தாள்.


"ரிங்" போய்க்கொண்டே இருந்தது.மீனாட்சியின் ஆர்வமும் அதிகமாகி மனதில் 

விவரிக்க முடியாத உணர்வைத் தோற்றுவித்தது.


யாரும் ஃபோனை எடுக்கவில்லை!


அப்போது தான் மீனாட்சிக்கு ஞாபகம். வந்தது!


'எனக்கு ரம்யாவின் நம்பர் தெரிந்தது போல் அவளுக்கு எப்படி என் நம்பர் தெரியும்?அந்தக் காலத்தில் நம்மிடம்

ஃபோன் ஏதும் இல்லையே!'


இப்போது என்ன செய்வது?


நேரில் பார்த்துப் பேசுவது தான் ஒரே வழியா?


'கணவருடன் தான் போகவேண்டும்.'


'ஒருதலைக் காதலாக இருந்தாலும் கணவர் என்னைப் பற்றி என்ன எண்ணுவார்?'


'நீ ஏதும் செய்யாமல் ராகவனுக்கு எப்படி உன்மேல் காதல் வந்தது என்று கேட்டால் என்னிடம் ஏது பதில்?'


'நான் எல்லோரிடமும் பேசுவது போல் தான் ராகவனிடமும் பேசிக் கொண்டிருந்தேன்'_என்று சொன்னால் நம்புவாரா?


'நிம்மதியாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் இதென்ன திடீர் குழப்பம்_ அதுவும் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்!


மீனாட்சி உள்ளே பார்த்தாள்.


சுந்தரேசன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.


ரம்யா எத்தனை முறை ராகவன் தன்னை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்று என்னிடம் தனிமையில் அழுதிருக்கிறாள்!


'துக்கத்தை சொன்னவள் மகிழ்ச்சியையும் சொல்லும்போது நம் மனதில் ஏற்பட்ட துக்கம் மறைந்துவிடும் அல்லவா?துக்கத்தை பகிர்ந்துகொள்ளும்

மனம் ஏன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மறந்து விடுகிறது?


'இல்லாவிட்டால் இத்தனை வருஷங்களில் நம்மை எப்படியாவது கண்டுபிடித்து சொல்லியிருக்கலாமே!எல்லோரும் அவரவர்க்கு வேண்டிய போது மட்டும் மற்றவர்களிடம் பேசுவதாகத் தோன்றியது!


காலம் எல்லோர் மனதையும் மாற்றிவிடுகிறது!


'நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை!'_ என்று என்னிடம் சொன்ன ராகவன் ரம்யாவை கல்யாணம் செய்துகொண்டார்.


பலவித எண்ணங்களில் மூழ்கிய மீனாட்சி மனதை தேற்றிக் கொண்டு மீண்டும் ஃபோன் செய்தாள்.


"ஹலோ!"_ ஆண் குரல் கேட்டது.


ராகவன் குரல் தான்!


"நான் மீனாட்சி பேசறேன்!"_ என்றாள்.


"தெரியறது!எப்படி இருக்கீங்க மீனாட்சி?ரம்யா ஃபோனை விட்டுட்டு கோயிலுக்குப் போயிருக்கிறாள்.நான் என்னைப் பற்றி உங்க ஆத்துக்காரரிடம் பேசிண்டு இருந்தப்போ உங்க பேரைச் சொல்லி நீங்களும் கல்யாணத்துக்கு முன்னாடி அதே பேங்க்ல திருநெல்வேலியில

'வொர்க்' பண்ணதா 

சொன்னார்.ஆனால் நான் எதுவும் அவரிடம் சொல்லலை!"


மீனாட்சிக்கு நிம்மதியாக இருந்தது.


'எத்தனை வயதானாலும் ஆண்கள் சுபாவம் மாறாது!'


"தேங்க்ஸ்!"_ என்றாள்.


"இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்..சுந்தரேசன் ரொம்ப நல்லவர்.நீங்க அவரைக் கல்யாணம் பண்ணின்டது எனக்கு ஏனோ மகிழ்ச்சியா இருக்கு!"


"நீங்க ரம்யாவை கல்யாணம் பண்ணின்டதும் எனக்கு சந்தோஷம்.நீங்க என்னைக் காதலித்ததையும் நான் ரம்யாவிடம் சொல்லலை!"


"நானும் சொல்லலை! ரம்யா

என்னிடம் தன் காதலைச் சொன்னபோது நான் உங்களிடம் என் காதலைச் சொன்னது தான் ஞாபகம் வந்தது.என் மனதில் ஏற்பட்ட துக்கம் அவளுக்கும் ஏற்படக்கூடாதுன்னு அவளைக் கல்யாணம் பண்ணின்டேன்.நான் இப்போ சந்தோஷமா தான் இருக்கேன்.அதனால் உங்களைக் காதலித்தது இல்லை என்று ஆகிவிடுமா?"


"உண்மை தான்!நடந்ததை மாற்ற யாராலும் முடியாது!அதே நேரம் காலம் மனதை மாற்றிவிடும்!"_ என்றாள் மீனாட்சி!


சுந்தரேசன் உறங்கிக் கொண்டிருந்தார்.


Comments

Popular posts from this blog

ஆத்மா

கனவு