ஆத்மா

"அப்புறம்?"


நடேசன் யோசித்தபடி


 "அந்த பொண்ணு நடந்து போனா!நானும் அவ பின்னாடியே நடந்து போற மாதிரி இருந்தது!"


"அப்புறம்?"


"அவ திரும்பி பார்த்தா!அவ கண்ணைப் பார்த்ததும் நான் அதுக்குள்ளே அப்படியே மூழ்கற மாதிரி இருந்தது.உடனே முழிச்சிண்டுட்டேன்!"


"பகல் கனவு பலிக்காதுன்னு சொல்லுவா!அம்மா!நீ பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணின்டு பயந்துண்டு இருக்காதே!"_ராகவன்


பார்வதி நடேசனை கவலையுடன் பார்த்தாள்!


"அவ மலைமேல் ஏறி அஙகிருந்து குதிச்சிருந்தா இவரும் தானே குதிச்சிருப்பர்?அதுக்கு தான் வயசானா சொன்ன பேச்சை கேட்கணும்னு சொல்றது!"


"ஒரு மட மாது உருகுகின்றாளே உனக்கா புரியவில்லை..."_நெஞ்சில் ஓர் ஆலயம் பாட்டு டிவி யில் ஓடிக்கொண்டிருந்தது மூவர் மனதிலும் திகில் கிளப்பியது!


"அப்பா! இந்தாங்கோ!சூடா காபி சாப்பிடுங்கோ!குழப்பம் சரியாயிடும்!"_என்றாள் ரம்யா


ஆர்வமுடன் காபியை வாங்கிய நடேசனுக்கு "மனைவி மட்டும் இல்லை மாட்டுப்பெண் 

அமைவதும் பகவான் செயல்" என்று 

தோன்றியது!


"டேய் ராகவா!நான் உங்கம்மா சொல்படி நடந்துக்கற மாதிரி நீயும் ரம்யா சொல்றபடி தான் நடந்துக்கணும்!,அப்போ தான் வாழ்க்கை நன்னா இருக்கும்!"


உடனே "சரிப்பா!" என்ற ராகவனை ரம்யா புன்னகையுடன் பார்த்த போது இருவர்

இடையிலும் "காலத்தை கடந்த" ஏதோ ஒரு பந்தம் இருப்பது போல் தோன்றியது ராகவனுக்கு!

காபியைக் குடித்த நடேசன்


"இப்போ தான் உயிர் வந்த மாதிரி இருக்கு!சாயங்காலம் 4 மணி தானே!படுத்துக்கறேன்!"


உடனே எல்லோரும் " வேண்டாம்! என்று அலறியதைக்கண்ட நடேசனுக்கு குழப்பமாக ருந்தது.


"ஏன்?"


"கனவு தொடர்ந்து வந்தா?"


"ராத்திரி தூங்கலாமோல்லியோ?"


"நீங்க சித்த நாழி நன்னா யோசிச்சப் பாருங்கோ!கனாவுல வேற ஏதாவது 

நடந்ததா?"


"வேற ஒண்ணுமில்லை!"


"ஆபீஸ்ல நீங்க வேலை செய்யும்போது யாரையாவது லவ் பண்ணினீங்களா?"


"பாரூ!உன்னோட 40 வருஷமா இருக்கேன்!இப்படி கேக்கலாமா!"


"எந்தப் புத்துல எந்த பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்?"


"புத்து இருந்தா தானே?"


"அம்மா!அப்பாவை குழப்பாதீங்க!"_ என்ற ரம்யாவை நன்றியுடன் பார்த்தார் நடேசன்!


"சரி!நீங்க லவ் பண்ணலை!உங்களை யாராவது லவ் பண்ணாளா?"

"அம்மா! அதுக்கு 

அப்பா எப்படி பொறுப்பாக முடியும்?"

"ராகவா!எனக்கு கவலையா இருககுடா!உங்கப்பா ஜாதகத்தை நல்ல ஜோஸ்யர் கிட்டே காண்பிச்சு இப்போ டைம் எப்படி இருக்குன்னு கேட்டுண்டு வாடா!"

"70 வயதில் கூட ஜாதகம் பார்க்கணுமா! அது நன்னா இருக்கறதாலேதான் 70 வயசு வரைக்கும் இருக்கா!"

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது!சும்மா இருங்க!"

என்று பார்வதி சொன்னபோது ஆபீஸில் தான் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஆக இருந்த போது தன்னை தீவிரமாக காதலித்த கோமதியிடம் இதே வார்த்தைகளைச் சொன்னது நினைவுக்கு வந்தது நடேசனுக்கு!


"சரிம்மா!என் ஃப்ரணட் ஒரு ஜோஸ்யர் பத்தி சொல்லிண்டே இருக்கான்!நங்க நல்லூர்ல இருக்கார்.இப்போ கிளம்பினா சரியா இருக்கும்"


"டிபன் சாப்டுட்டு போகலாம்!அம்மா நீங்களும் உட்காருங்கோ!"


"எனக்கு தான் பழக்கம் இல்லையேம்மா!கார்த்தால பூஜை முடிஞ்சு சாப்பிட்டா அப்புறம் ராத்திரி தான்!"


"அம்மா!நமக்குள் இருக்கிற பகவானை பட்டினி போடலாமா?"


ரம்யாவை வியப்புடன் பார்ததபடி மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.


ரம்யா பரிமாறிபடி கேட்டாள்:


"உலகத்துல எழுதப்படிக்கத் தெரியாதவா ஏராளமா இருக்கா!அவாளுக்கு எந்த அனுஷ்டானமும் தெரியாது!அவா பகவானை மனசில் நினைச்சா பகவான் அவாளுக்கு அனுக்ரஹம் பண்ணமாட்டாரா?"


"பண்ணுவார்மா!பகவானுக்குபக்தி தான் தேவை!அதனால் தான் அரக்கர்கள் தவம் பண்ணாலும் வரம் கிடைக்கறது!

 அதுக்காக நம் அனுஷ்டான

த்தை விடலாமோ?"


"அனுஷ்டானம் எல்லாம் நம் திருப்திக்கு தானேம்மா?பகவானை நம்மால் திருப்தப்படுத்த முடியுமா?"


மூவருக்கும் ஏற்பட்ட ப்ரமிப்பு

 இன்னும் அதிகமாயிற்று!


வெளியே விளையாடப் போயிருந்த பேரன் முரளி உள்ளே வந்ததைக் கூட

கவனிக்கவில்லை பார்வதி!


"கவலைப்படாதீஙகம்மா!பித்ரு கர்மா தவறாம பண்றவாளுக்கு

ஒரு குறையும் ஏற்படாது!நீங்க

அமெரிக்காவில்

இருந்தாலும் அதை விடறதில்லையே!"



"ராகவா! இனிமே

இந்த வீட்ல ரம்யா

வச்சது தான் சட்டம்!"


"நம் எல்லோருக்குமே 

பகவான் வச்சது

தான் சட்டம்!அது

முன்னாடியே நமக்கு தெரிஞ்சா

பகவானுடைய பெருமை புரியுமா?"


ராகவன் கண்களுக்கு ரம்யா தேவதை

போல் தெரிந்தாள்!

"ராகவா!அப்படியே நம் ரங்கன் ஜாதகத்தையும் கையோட எடுததுண்டு போய் எப்போ கல்யாணம் ஆகும்னு கேட்டுண்டு வாடா! உன்னைவிட 3 வயசு தான் சின்னவன்.உனக்கு 5 வயசு பையன் இருக்கான்!அருமையான இடம் எத்தனையோ வரது.அவனுக்கு ஏன் 'கல்யாணம்" அப்படின்னாலே கசக்கறது?அந்த பகவானுக்கு தான் வெளிச்சம்!ரம்யா!நீ என்னம்மா நினைக்கறே?"

"அம்மா!ஆண்கள் 60வயதில் கூட குழந்தை பெத்துக்கலாம்!பெண்களுக்கு அப்படி இல்லை!பெண்களுக்கு கல்யாணம் ஆகலேன்னா தான் கவலைப்படணும்!உங்களுக்கு தான் பெண் இல்லையே!"


"அந்தக் குறையை தான் நீ தீர்த்துட்டயேம்மா!"


ரம்யா அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டாள் பார்வதி

"நாங்க ஜோஸ்யரைப் பார்க்க போய்ட்டு வரோம்மா!அப்பா கார்ல உட்கார்ந்துண்டு இருக்கா!"


"பார்த்து ஓட்டிண்டு போடா!அப்பாவை ஜோஸ்யரிடம் தனியா பேச விடு!என்ன இருந்தாலும் காதல் "பர்சனல்" விஷயமாச்சே!ஆனா கடைசியா ஜோஸ்யர் கிட்டே விஷயம் தெரிஞ்சுண்டு வா!"


ராகவன் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தான்


"அப்பா! கிளம்பலாமா?"


"ம்"_,என்ற நடேசன் ஜோஸ்யர் வீடு வரும் வரை ஏதும் பேசாமல் ஆழ்ந்த சிந்தனையில் 

இருந்தது ராகவன் மனதில் கவலை ஏற்படுத்தியது!


வீடு வந்ததும் காரை தெருவில் நிறுத்திவிட்டு

இறங்கினார்கள்


உள்ளே சென்று

அமர்ந்தனர்


ஓர் இளம் தம்பதி மட்டும் காத்திருந்தனர்!


முகத்தில் மகிழ்ச்சி இல்லை!


ரம்யாவை பற்றி எண்ணிப் பார்த்த ராகவன் பகவானுக்கு நன்றி சொன்னான் 


'அழகில் மயங்கி கல்யாணம் செய்தபிறகு தான் குணம் எப்படி என்று தெரிகிறது! 


ஆனால் எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்தாலும் மனம் எப்படி "ஒரு பெண்ணிடம்" மயங்குகிறது!


பெண்களுக்கும் அதுபோல் தானே!


இதில் ஏதோ மர்மம் இருப்பது

போல் தோன்றியது!


ஜோஸ்யரிடம் கேட்க வேண்டும்!


இரண்டு பேருக்கும் காதல்

ஏற்பட்டால் 


'முன்

ஜென்மத்தில் அவர்கள் தம்பதியாக இருந்தார்கள்'


என்று சொல்லலாம்!


'ஒரு தலை காதல்'

எப்படி ஏற்படுகிறது?


அதனால் மனதில் ஏற்படும் 

வலியை எப்படித்

தீர்ப்பது?


காரணமே இல்லாமல் மனதில் ஏற்படும்

காயம் அல்லவா?

இரண்டு பேருக்கும் ஏற்படும் காதல் "முன் ஜென்மத் தொடர்பு" என்றால் "ஒரு தலை காதல்" எப்படி ஏற்படுகிறது? அது தானே காரணம் இல்லாமல் காயப்படுத்துவது?


"சார்! உங்களை வரச்சொல்றாங்க!"


எண்ணத்தில் இருந்து மீண்ட ராகவன் அப்பாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்


"நமஸ்காரம்!"


"நமஸ்காரம்!உட்காருங்க!"


ராகவன்",இது அப்பா ஜாதகம் அப்பாவுக்கு ஏதோ கவலை!இது தம்பி ஜாதகம்!அவனுக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை!"


இரண்டு ஜாதகங்களையும் நீண்ட நேரம் பார்த்துவிட்

டு ஜோஸ்யர் நடேசனிடம் கேட்டார்:


"உங்களுக்கு புரியாத கனவு ஏதாவது வந்ததா?"


நடேசன் சொன்னார்


"பையன் சீக்கிரம் கல்யாணம் பணணிக்குவான்!,வேற எதுவும் கேட்காதீங்க!"


இருவரும் வீட்டுக்கு வந்து காரில் இருந்து இறங்கும்போது ரம்யா ஓடி வந்து சொன்னாள் 


"உங்க தம்பி போன் பண்ணார்!யாரையோ லவ் பண்றாராம்!"

உள்ளே நுழைந்த கணவரை முக மலர்ச்சியோடு வரவேற்றாள் பார்வதி!


"அம்மா!ரம்யா ஏதோ சொல்றாளே உண்மையா?"


"ஆமாண்டா ராகவா!நானும் பேசினேன்!அப்பா கண்டது நல்ல கனவு தான்"


ரம்யா குறுக்கிட்டு சொனனாள்:


"அம்மா! நாம் நல்லதே நினைச்சா நல்லது தானா நடக்கும்!எதை  

நாம் விதைக்கிறோமோ அது தானே விளையறது?யத் பாவம் தத் பவதி!"


"ராகவா!ரம்யா கிட்டே நீ நிறைய கத்துக்கணும்!

ரம்யாவின் புன்னகை ராகவனை சொர்க்கத்துக்கே அழைத்துச் சென்றது!


"ஏன்னா!ஒரு விஷயம்!"


"என்ன?"


"பொண்ணோட அம்மா நம்பளவா!ஆனா அப்பா யாரோ முகர்ஜியாம்!"

"அம்மா!முகர்ஜி கூட பெங்காலி ப்ராமணா தான்!என் ஆபிஸ்ல கூட இருக்கா!"_ராகவன்


"எப்படியோ ரங்கனுக்கு கல்யாணம் ஆனா சந்தோஷம்!நீங்க என்ன சொல்றீங்க?"


கணவர் நடேசன் ஏதோ யோசனையில் இருந்ததைப் பார்த்ததும் கேட்டாள்:


"உங்களுக்கு இஷ்டம் இல்லையா?"


"தாராளமா கல்யாணம் பண்ணிக்கட்டும்! கல்யாணம் பண்ணிக்கறவா இஷ்டம் தான் எல்லாத்தையும் விட முக்கியம்!"


எல்லோரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு படுக்கச் சென்றனர்


நடேசன் 'காலையில் முதல் வேலையாக ஜோஸ்யரை பார்க்க வேண்டும்'_ என எண்ணும்போது ரங்கனிடமிருந்து மீண்டும் போன்!


"ரொம்ப சந்தோஷம்பா !"


"இன்னொரு விஷயம்பா!"


"பெண்ணுடைய அப்பா முகர்ஜி தானே!எஙகளுக்கு சம்மதம்!"


"பெண்ணுடைய அம்மா இப்போ இல்லை!நீ வேலை செய்ஞ்ச கம்பெனில தான் வேலை பார்த்தாளாம்!பேர் கோமதி!தெரியுமா?"


"தெரியலைடா!அப்புறமா பேசறேன்!"


அதிர்ச்சியில் உடல் நடுங்க படுக்கச் சென்ற நடேசனை யாரும் கவனிக்கவில்லை!


Comments

Popular posts from this blog

கனவு

மன வாசனை