சண்முகத்தை இன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று முடிவு
செய்தார் நடேசன். மூன்று நாட்களாக அவரைப் பார்க்காது இருந்தது என்னவோ போல் இருந்தது. நாற்பது வருடப் பழக்கமாயிற்றே!
பள்ளி கல்லூரியில் ஒன்றாகப் படித்ததும் இல்லாமல் ஒரே வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்று தினம் மாலை வேளை பூங்காவில் சந்திப்பு. வீடும் அருகில் தான்.
தினம் இரண்டு மணி நேரமாவது பழைய கதைகளை பேசுவர்.அதற்கு முடிவு ஏது? நண்பனிடம் மனம் விட்டுப் பேசுவது போல் வேறு யாருடன் பேச முடியும்? பேசினால் தான் புரிந்து கொள்வார்களா? அவரவர்க்கு வாழ்க்கை பற்றி ஒரு பார்வை பதிந்து விடுகிறது.அதை மாற்றிக் கொள்ள யாருக்கும் மனம் இல்லை.
மாலை வெயில் மனதுக்கு இதமாக இருந்தது.நடந்தே போய் விடலாம். சட்டை போட்டுக் கொண்டார்.கண்ணாடியை மறக்காமல் எடுத்துக் கொண்டார்.சட்டைப் பையில் பர்ஸ் இருப்பதை தொட்டுப் பார்த்து உறுதி செய்தார்.
வரேன்மா !_ என்றார் மனைவியிடம்.
இருட்டறதுககுள்ள வந்துடுங்க
மாட்டுப் பெண் மகளுக்குப் பாடம் சொல்லித் தருவதில் முனைப்பாக இருந்தாள்.
திரும்பியாவது பார்க்க கூடாதா?
பலவிதமாக சிந்தனை செய்து கொண்டே வந்த நடேசன் சண்முகத்தின் வீட்டில் நுழைந்தார்.
என்னப்பா மூணு நாளாக ஆளைக் காணோம்? உடம்பு சரியில்லையா?அதெல்லாம் ஒண்ணுமில்லை.கொஞ்சம் வேலை.
விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பேத்தியைப் பார்த்து சொன்னார்:ஆத்தா,ஐயாவுக்கு குடிக்க தண்ணி கொண்டு வா
என்னப்பா,பேத்தியைப் பார்த்து ஆத்தான்னு சொல்ற?
சொல்றேன்.
சண்முகத்தின் மனைவியும் மருமகளும்
உள்ளிருந்து வந்தனர்.
வணக்கம் ஐயா.வாஙக
நடேசன் பதில் வணக்கம் சொல்லும்போதே வியந்தார் அவர்கள் முகத்தில் ஒரு திருப்தி எனக்கு இது போதும் என்பது போல்
இத்தனைக்கும் நடேசனைப் போல நல்ல வருமானம் இல்லை. தனி வீடும் இல்லை.ஃபளாட் தான். அதுவும் அவ்வளவு பெரிதில்லை.
அது எம் பொஞ்சாதி. நீ பார்த்திருக்க. இது மருமக கௌரி.கல்யாணத்துக்கு வந்தியேப்பா.
நடேசன் தலையாட்டினார்.
கௌரியின் அடக்கம் அவரைக் கவர்ந்தது.மருமகள் புவனாவும் அது போல தானே இருக்கிறாள் என சட்டென்று தோன்றியது.
நீங்க எங்க வீட்ல எல்லாம் சாப்பிட மாட்டீங்க.
அதெல்லாம் இல்லம்மா.உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க மாமியார் கையால் சாப்பிட்டிருக்கேன்.நீங்க போற முருகன் கோயிலுக்கு தானே நாங்களும் போறோம். இப்ப காபி மட்டும் குடுங்க.
எங்க மருமக சமையல ஒரு நாள் சாப்பிட்டு பாருங்க.கோயில் பிரசாதம் மாதிரி இருக்கும்.
அதுக்கென்ன.ஒரு நாள் வரேன் என்று சொல்லும் போதே தான் தன் மாட்டுப் பெண்ணை ஒரு நாளும் பாராட்டியதில்லையே என்ற எண்ணம் எழுந்தது.
காபி சாப்பிட்டுக் கொண்டே சண்முகத்திடம் கேட்டார்.
ஏதோ சொல்ல வந்தாயேப்பா.
படைக்கிறவன் தானேப்பா கடவுள்?
ஆமாம்
என்னைப் படைச்சது எங்க அம்மா.உன்னைப்
படைச்சது உங்க அம்மா.
அவங்க கடவுளுக்கு சமம் தானே.
வேதம் படித்த நடேசன் வியப்புடன் கேட்டார்:
மேல சொல்லு
முருகேசன் தொடர்ந்தார்
எங்க அம்மா என்னைப் பெற்றது போல என் பேத்தியும் ஒரு குழந்தையைப் பெறுவாள் இல்லையா?
நடேசன் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டார்.மனதில்
ஏதோ கதவு திறந்தது.
அதனால் எம் பேத்தியும் அம்மா தானே? நாங்க ஆத்தான்னு கூப்பிடுவோம். பேத்திய மட்டும் இல்ல. வீட்டுக்காரி தவிர எல்லா பொம்பளைங்களையும் ஆத்தான்னு தான் கூப்பிடுவோம்.
எவ்வளவு பெரிய உண்மையை சர்வசாதாரணமாக சொல்கிறார் !
நடேசா, இருட்டறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போவலையா?
இப்ப தான் என் மனசில் வெளிச்சம் வந்திருக்கு என எண்ணிய நடேசன்
ஆமா,போய்ட்டு வர்றம்மா என வெளியில் வந்து சொன்னபோது வாயிற்கதவுக்கு மேல்
அன்பே சிவம்
என எழதி இருப்பதைப் பார்த்தார்.
திருமபி நடந்து வரும்போது மனம் எண்ணியது:
நாம் சடங்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தத்துவத்தை விட்டுவிட்டோமோ?
விருப்பு வெறுப்பு என்பது இல்லாமல் இருந்தால் தானே வாழ்க்கை புரியும்.
வீட்டுக்குள் நுழைந்தார்
நடேசன்.
புவனா!
என்னப்பா?
உனக்குப் பிடிச்ச ஆவின் பால் கோவா!
புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்
புவனா ஒரு கணம் அம்பாள் போல் தெரிந்தாள்.
The mind is trained to always make comparisons.
ReplyDelete