சக்தி
மகாலிங்கம் சற்றுக் கண்ணை மூடி தியானம் செய்தார்.சற்றுக் குழப்பமாகத்தான் இருந்தது.
இந்தாங்கோ காபி.கேட்டா தரமாட்டேனா? புஸ்தகத்தை கைல வச்சுண்டு தூங்குவானேன்?அதும் ராமகிருஷ்ணர் உபதேசம். ஏற்கனவே ரெண்டு டோஸ் ஆயாச்சு.வயசானா காபியை குறைச்சிக்கணும்.இல்லாட்டா உங்களைப் போல ராத்திரி பூராவும் தூங்காம விட்டத்தை பார்த்துண்டே இருக்கணும்.
பாகி(சகதர்மிணி பாகீரதியை இப்படித்தான் அழைப்பார்)நான் ராத்திரி பூரா தூங்கலேன்னு நோக்கெப்படி தெரியும்?
நீயும் தூங்கலியோ?
முழிச்சிக்கறப்போ பார்க்கிறது தான். அது சரி ,அன்னிக்கு மயிலாப்பூர் குளத்தங்கரைல அம்பாளைப் பார்த்தேன்னு சொன்னேளே.அதுக்கப்புறம் எங்கயாவது பார்த்தேளா?
அவள் கவலை அவளுக்கு.மறுபடியும் டாக்டரைப் பார்க்க போகும் போது சொல்ல
வேண்டுமே.அதுவும் தனக்காகத்தான் டாக்டரிடம் போகிறேன் என்று பொய் சொல்லி துணைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.டாக்டர் இருவரிடமும் பேசுவார்.
மறுபடி பார்த்தா சொல்லறேன்
பதில் சொன்ன மகாலிங்கம் புத்தகத்தை பார்த்தாலும் மனம் என்னவோ ஆயிரம் முறை அசை போட்டதை மறுபடியும் நினைத்துப் பார்த்தது.
அன்று வெள்ளிக்கிழமை
மாலை ஆறு மணி இருக்கும்
இருவரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மேற்கு வாசலில் இருக்கும் போது மகன் குமரன் அமெரிக்காவில்
இருந்து போன் பண்ணினான்.
பாகி கோயில் வாசலில் இருந்த பூக்காரியிடம் பூ
வாங்கிக் கொண்டு இருந்தாள்
ஒவ்வொறு முறை கோயில் அருகில் இருக்கும் போதும் மகனோ மகளோ போன்
செய்வார்கள்.
மகாலிங்கத்துக்கு அதை யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.அதில் ஏதோ சேதி இருப்பதாகத் தோன்றியது.
தான் பேசிவிட்டு மனைவியிடம் தருவதற்காக பார்த்த
போது பிரமிப்பில் ஆழ்ந்தார்.
மனைவி பூ வாங்கிக் கொண்டு இருந்தது சாட்சாத் அம்பாளிடம்.
பூக்காரியினிடத்தில் சர்வ அலங்காரத்துடன் அம்பாள்!
இவரைப்பார்க்கவில்லை.ஆனால் அம்பாள் புன்னகை
செய்தது தன்னைப் பார்த்து தான் எனத் தோன்றியது.
சற்று நேரத்தில் பழையபடி பூக்காரி!
மனப் பிரமையா என யோசித்தார்.இல்லை என நிச்சயம்
தெரிந்தது.
அதை தானே மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டால் தான் தனக்கே உறுதியாகிறது.யாருக்கும் சொல்ல தயக்கமாக
இருந்தது
பாகீரதியிடம் இந்த அற்புத அனுபவத்தை எப்படிச் சொல்லாமல் இருப்பது ?
சொல்லிவிட்டார்.
வரவர உங்களுக்கு கற்பனை ஜாஸ்தி ஆகிண்டிருக்கு.ராமகிருஷ்ணர் பார்த்தார் .அவர்
உபதேசத்தை படிச்சுட்டா
அம்பாள் உங்களுக்கும் காட்சி தருவாளா?
அம்பாளை பக்தி மூலம் பார்க்கலாம்னு தான் ராமகிருஷ்ணர் உபதேசம் பண்றார்.
இதோட நிறுத்திக்கறேளா? வீடு வந்தாச்சு . ஆட்டோவில் இருந்து இறங்கி உள்ள வந்து ஒரு டம்ளர் மோர் ஜில்லுனு தரேன்.குடிச்சுட்டு தூங்குங்கோ.
சரி_என்றார் மகாலிங்கம்
அது ஆயிற்று இரண்டு மாதம்.
மகாலிங்கம் பழைய நினைவில் இருந்து மீண்டார்.
பாகீ, லோகம் எப்படி நடக்கிறது ?
இதென்ன கேள்வி? நாம்
எல்லாம் பிறக்கிறோம்.
கல்யாணம் பண்ணிக்கறோம் .குழந்தை பெத்துக்கறோம்.அவாளும் பெரியவாள் ஆனதும் அதையே பண்ணறா.
யாரும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலேன்னா ?
பாகீரதி இந்தக் கேள்வியை எதிர்ப் பார்க்கவில்லை
யோசித்தாள்
கல்யாணம் பண்ணிக்க
செய்யறது எந்த சக்தி?
ஏதோ ஒரு சக்தி.சாப்பிட
வாங்கோ.எனக்கு பசிக்கறது.
மகாலிங்கம் எழுந்தார்.
பாகீரதி மாலையில் மீண்டும் டாக்டரிடம் மகாலிங்கத்தை கூட்டிப் போக வேண்டும் என தீர்மானித்தாள்.
ஏதேதோ கேள்வி கேட்கிறாரே?
வியாதி முற்றுவதற்குள்
வைத்தியம் செய்ய வேண்டும்.
மாலை காபி ஆயிற்று.வாழைப்பழம் நொறுக்கு தீனியும் ஆயிற்று.
ஏன்னா,ஒரே முட்டி வலியாயிருக்கு.டாக்டரைப் பார்க்கணும்.
அதுக்கென்ன? இப்பவே போனா கூட்டம் இருக்காது.
டாக்டர் இருவரையும் அழைத்தார்.
டாக்டருக்கே அறுபது வயதுக்கு மேல் இருக்கும்.முகத்தில் ஓர் அமைதி
பல கேள்விகள்_இரண்டு பேர்களையுமே கேட்டார்.
கொஞ்சம் வெளியில இருக்கேளா?_மகாலிங்கத்தை பார்த்து சொன்னார்.
மகாலிங்கம் வெளியில் வந்து அமர்ந்தார்.
உள்ளே டாக்டர் கேட்டார்:
நீங்கள் சொன்னது தவிர வேறு ஏதாவது வித்யாசமா தெரிகிறதா
உங்க கணவரிடம்?
எனக்கு தெரிந்து இல்லை டாக்டர் . ராத்திரி சரியா தூங்கறதில்ல.
வயதானால் தூக்கம் குறையும்.அதே போல ஆன்மீகத் தேடலும் இருக்கும்.மற்றபடி பயப்பட ஒன்றும் இல்லை
பாகீரதி வெளியில் வந்தாள்.
என்ன?
பயப்பட ஒன்றும் இல்லை
வீட்டுக்குப் புறப்பட்டனர்.
பாகீ,நீ ஆட்டோல போ.நான் கொஞ்சம் வாக்கிங் போயிட்டு வரேன்.சாவி உங்கிட்ட தான் இருக்கு
சரி,சீக்கிரம் வந்துடுங்கோ.
வாக்கிங் போய்விட்டு பழம் வாங்க கடையில் நின்றார்.
பையன் டென்த்துல நல்லா மார்க் வாங்கி இருக்கானா?_கடை நடத்தும் பெண்மணியை யாரோ கேட்டார்கள்.
நல்ல மார்க் தான்_பதில்
அரை டஜன் வாழைப்பழம் குடுங்க _மகாலிங்கம் கேட்டார்.
கொடுக்கும் போது வேறு ஒன்றைக் காட்டினார்.
அது நல்லா இருக்கே?
பார்க்க அப்படி இருக்கு.எல்லாம் ஒன்று தான்
புன்னகையுடன் சொன்னாள்.
மகாலிங்கத்துக்கு ஏதோ
ஒரு பேருண்மை புரிந்தது
சட்டென்று பார்க்கும் யாவும் மறைந்து எங்கும்
நிலவின் ஒளி மட்டுமே உணர்ந்தார்_ஒரு கணம்
பழத்தை வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தார்.
இதை பாகீயிடம் சொல்லக்கூடாது எனத் தீர்மானித்தார்.தன்னை அவள் டாக்டரிடம் அழைத்துப் போவது தெரிந்து இருந்தது.
பயப்பட ஒன்றும் இல்லை
Comments
Post a Comment