ஆனந்தம்
"ஏன்னா.! மணி ஏழாகப் போறது.உங்க ஃப்ரண்ட் இன்னும் வரலையே உங்களோட 'வாக்கிங் ' போறதுக்கு ? வயசான காலத்துல நீங்க தனியா போனா எனக்கு வேலை ஓடாது.
"பாகி ! நான் நன்னா தான் இருக்கேன்.நீயா கற்பனை பண்ணின்டு ஏன் அவஸ்தைப் படறே! நீயும் பார்க்க நன்னா தான் இருக்கே! "
"வழியாதேள்.பசங்களுக்குக் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டதால இப்போ உங்களுக்கு மறுபடியும் தனிக்குடித்தனமாக்கும்.அது கிடக்கட்டும்.அவர் ஏதோ வீடு மாறிட்டதா சொன்னேளே ! அதனால 'லேட்' ஆறதோ ?உங்களுக்கு நாழியாறதே ! 'செகண்ட் டோஸ் ' கலந்துடவா ? "
"வெயிட் பண்ணு .வழக்கம் போல அவனோட சேர்ந்து சாப்பிடறேன்.வந்துடுவான்.அவன் 'வாக்கிங் ' போகவா வரான்? நீ போடற காபிய சாப்பிடறதுக்கல்லவா வரான்? "
"இப்படிச் சொல்லியே காரியம் சாதிச்சுண்டுடறேள்." என்று சொன்னாலும் பாகீரதிக்கு உள்ளூர மகிழ்ச்சி தான்.எந்த வயதானாலும் பாராட்டை விரும்பாதவர் யார் ? இருபது வருடங்களாகப் பாடிக் "கை தட்டல்" வாங்கினாலும் அன்றைய கச்சேரிக்கு 'அப்ளாஸ்' எப்படின்னு தானே பார்க்கிறார் பாடுபவர்.
சுந்தா வாசலுக்கு வந்து
பார்த்தார்.தெருக் கோடியில் நீலகண்டன் வந்து கொண்டிருந்தார்.
"நீலு ! என்ன இன்னிக்கு லேட் ? புது வீடு ரொம்ப தூரமோ?"
"ரொம்ப தூரமில்லை.மாமி போடற காபியைச் சாப்பிட எவ்வளவு தூரத்தில் இருந்தும் வரலாம்."
காபியை வாங்கிக் கொண்டே சொன்னார் :
"மாமி !இந்த வெள்ளிக்கிழமை நீங்க ரெண்டு பேரும் எங்காத்துக்குச் சாப்பிட வரணும்.ஆத்துக் காரி சொல்லச் சொன்னா.பத்தரை மணிக்கெல்லாம் ரெடி ஆயிடும்."
"தாராளமா வரோம்.'பிராமணாள் போஜனப்ரியாள்'னு சொல்லுவாளே.அதைப் பொய்யாக்கலாமோ ? பாகி ! நான் போயிட்டு வந்துடறேன்.யாராவது 'காலிங் பெல்' அடிச்சா யார்னு பார்த்துண்டு கதவைத் தொற.தனி வீடுன்னா இதான் அவஸ்தை.அப்பப்போ மராமத்து வேற ! நீலு 'ஹாயா' இருக்கார்.'கட்டினவனுக்கு ஒரு வீடு .கட்டாதவனுக்குப் பல வீடு '"
தெருவில் இறங்கி நடந்தார்கள்.
"எங்கிட்ட ஏதுப்பா பணம் வீடெல்லாம் வாங்க ?பென்ஷன் வருது வாழ்க்கை நடக்கறது.பசங்களை நன்னா படிக்க வச்சு 'செட்டில்' பண்ணியாச்சு.அதுக்கு மேல நமக்கு என்ன வேணும்?உடம்பு
ஆரோக்யமா இருந்தா சரி! எத்தனை பெரிய வீடா இருந்தாலும் படுத்தா நிம்மதியா தூக்கம் வறது தானே முக்கியம்?"
"நீலு ! எத்தனை பெரிய விஷயத்தை எவ்வளவு சுலபமா சொல்லிட்ட ! அண்டா நிறைய சாதம் இருந்தாலும் நாம் சாப்பிடற அளவு மாறுமோ?பாயசம் நன்னாருக்குன்னு அதிகமா சாப்பிட்டா வயிற்றுவலி வந்து டாக்டர் கிட்டதானே போறோம்? எல்லாம் அது மாதிரி தான். 'திருப்தி'ன்றது நாமா ஏற்படுத்திக்கறது தானே? "
" முதல்ல என் புது வீட்டைப் பார்த்துடலாம்.அப்போ தான் நீங்க வர்றதுக்கு
வசதியா இருக்கும்."
"சரி ! தனி வீடா ?"
" ரெண்டு பேருக்கு எதுக்குப்பா தனி வீடு. போர்ஷன் தான்.பின் போர்ஷன் வேற காலியா இருக்கு. வீட்டுக்காரர் என்னிடம் 'யாராவது இருக்காளா'ன்னு கேட்டார்.அவர் மாடில இருக்கார்.ரிடையர்ட் 'கஸ்டம்ஸ்' ஆபீஸர்.இது மாதிரி இன்னும் ரெண்டு வீடு இருக்கு ! "
வீட்டு வாசல்ல வெய்யில்ல நின்னுண்டு இருக்காரே,அவர் தான் வீட்டுக்காரர்."
"நெருங்கியதும் அறிமுகம் செய்தார்..
"சார் ! இவர் என் ஃப்ரண்ட் பஞ்சாபகேசன்.இவர் வீட்டுக்காரர் மிஸ்டர் ராமனாதன்.ரிடையரட் கஸ் டம்ஸ் ஆபீஸர்."
"ஹலோ சார்.! உங்களுக்கு வாடகைக்கு வீடுவேணுமா ?பின் போர்ஷன் காலியா இருக்கு!"
"அவருக்குச் சொந்தவீடு இருக்கு சார்.கார்த்தால ஏன் வெய்யில்ல நின்னுண்டு இருக்கேள் ? "
" இன்னிக்குப் பேப்பர்ல மூணாவது தடவையா 'அட்வர்டைஸ்மெண்ட்' குடுத்திருக்கேன்.அதான் பேப்பர் வருதான்னு பார்த்துண்டிருக்கேன்.இன்னிக்குப் பார்த்து லேட்.இந்த தடவையாவது யாராவது 'டெனன்ட்' வராளான்னு பார்க்கணும்.நாலு மாசமா காலி!
நாற்பதாயிரம் நஷ்டம் "
கவலையோடிருந்த வீட்டுக்காரரையும் கலகலப்பாக இருந்த குடித்தனக்கார நண்பரையும் மாறி மாறிப் பார்த்தார் பஞ்சு !
Comments
Post a Comment