நீ நான் நிலா

 "இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று... "

மாலை நேரம் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்த பாட்டைக் கேட்டுக்  கொண்டிருந்த ரகு 'என்ன அருமையான கவிதை' என எண்ணிப் பழைய நினைவுகளில் மூழ்கியது.

"அப்பா! இந்தக் கணக்கு எப்படின்னு சொல்லித்தரயா?"
ஐந்து வயதான அருமைப் பிள்ளை கேட்டது 
காதில் விழவில்லை.

"டேய் முரளி! அப்பாவுக்குப் பாட்டுக் கேட்கும்போது உலகமே மறந்துடும்டா.அதுவும் காதல் பாட்டுன்னா கேக்கவே வேணாம்.இந்தாங்கோ காபி!"

ரகு திடுக்கிட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்டு காபியைக் கையில் வாங்கிக் கொண்டான்.

"முரளி கேட்டது காதுல விழுந்துதா?"

"என்ன கேட்டான்?"

"நீங்க பகவானிடம் இரண்டு மனம் வேணும்னு கேட்டப்போ உங்களை கணக்கு கத்துக் குடுக்க கேட்டான்.அது சரி!ஒரு மனசை வச்சுண்டே இத்தனை அவஸ்தையா இருக்கே.ரெண்டு மனசு எதுக்கு?கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது 'லவ்' பண்ணீங்களாக்கும்.ஏன் அவளையே பண்ணிக்கலை?நமக்கு தான் குழந்தை பிறந்து 
அஞ்சு வருஷம் ஆயிடுத்தே.எங்கிட்டே அன்பா தானே இருக்கீங்க?ஏன் சில சமயம் இந்தமாதிரி 'ஏதோ உலகத்துக்கு' போயிடறீங்க?நான் தப்பா நினைக்க மாட்டேன்.யாரையாவது காதலிச்சிங்களா?"

"மீனு! நாம் காதலிச்சா தானா?மத்தவா நம்மைக் காதலிக்கக் கூடாதா?"

"அடி சக்கை!கேட்கவே ஸ்வாரஸ்யமா இருக்கே!அந்த அருமையான அனுபவத்தை எடுத்து விடுங்க."

"மீனு! காதல் உண்மையிலே அவஸ்தை தானே தவிர ஆனந்தம் கிடையாது."

"உங்க 'வியாக்யானம்' விசித்திரமா இருக்கே!"

"ஒருத்தர் மட்டும் காதலிக்கும் போது இன்னொருவருக்கு அது அவஸ்தை தான்."

"அதிலென்ன அவஸ்தை?"நான் 
உன்னை 'லவ்' பண்ணலை" அப்டின்னு சொல்லிட்டுப் போகவேண்டியது தானே?"

"அது அத்தனை சுலபமில்லை மீனு.ஒரு விஷயம் சொல்லட்டுமா?"

"என்ன?"

"நாம் பகவானைத் தினமும் "மனசார" வேண்டிக்கறோம் இல்லையா?"

"ஆமாம்.எத்தனை உருக்கமா வேண்டிக்கறோமோ அத்தனைச் 
சீக்கிரமா வரம் கிடைக்கும்னு சொல்லுவா.."

"நம் மனசால பகவானையே அசைக்க முடியும்போது மனுஷாளை அசைக்க முடியாதா?"

"உங்க மனசும் அசைஞ்சுடுத்தாக்கும்.ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?"
"சொன்னேனே மீனுஆண் _பெண் ஒண்ணா வேலை செய்யற 
இடத்துல இது மாதிரி நடக்கற வாய்ப்பிருக்கு.அதுக்காக ரெண்டு பேர் என்னை லவ் பண்ணா நான் ரெண்டு கல்யாணம் பண்ணிக்க முடியுமா?"

"உண்மை தான.ஆனா ஒரு பெண் மனசுல ஒருத்தரை நினைச்சுட்டா அப்புறம் மறக்கமாட்டா.அப்புறம் என்ன ஆச்சு?"

"அவளுக்கு வேற இடத்துல கல்யாணம் ஆயிடுத்து"

"நான் வந்து உங்க கிட்டே மாட்டிண்டேன்.அது சரி.அவ பேர் என்ன?"

"நிலா"

"புதுசா இருக்கே!"

"அவ அப்பா கவிதைப் பிரியர்."வெண்ணிலா"எழுதும் புதுக்கவிதை ரொம்பப் பிடிக்கும்.அதனால 'வெண்ணிலா'ன்னு பேர் வச்சு 'நிலா'ன்னு கூப்பிடுவார்."

"என்ன ஆச்சர்யம் பாருங்க!பக்கத்து ஃப்ளாட்டை வாங்கிண்டு வந்திருக்கவா பேரும் 'வெண்ணிலா'.என் வயசு தான் இருக்கும்.கார்த்தால பார்க்கும் போது 'இன்ட்ரொட்யூஸ்'
பண்ணின்டோம்.பாவம்."

"அதிலென்ன பாவம்?"

"அவா அப்பா, அம்மா,அந்தப் பெண் மூணுபேர் தான்.அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆன 
ஆறு மாசத்துலயே "டைவர்ஸ்" ஆகிடுத்தாம்"

மீனா சொன்னதைக்கேட்ட ரகுவின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.உடனே 'வெண்ணிலா' என்ற பெயரில் எத்தனையோ பேர் இருப்பார்கள்.இது அவளாக இருக்காது என்று உள்ளம் சமாதானம் செய்தது.

"என்ன? உங்க வெண்ணிலாவா இருக்கும்னு யோசிக்கறீங்களா?கார்த்தால பார்த்தா தெரியறது.இப்பவே தெரிஞ்சுக்கணுமா?"

மனம் அலை பாய்ந்தாலும்

 "அப்படித் தெரிஞ்சுண்டுதான் என்ன ஆகப்போறது?தெரியாம இருக்கறதே நல்லது" என்றான்.

"உண்மை தான்.உங்க நிலாவுக்கு அப்படி ஆயிடுத்துன்னு தெரிஞ்சா உங்க மனம் இன்னும் வேதனைப்படும்"

'இவள் எப்படி நம் 
மனசில் இருப்பதை அப்படியே படிக்கிறாள் !'

ரகுவின் மனம் எண்ணியது

'எல்லாவற்றையும் எத்தனை யதார்த்தமாக எடுத்துக்கறா..'

"நான் உங்களை ஒண்ணு கேட்கட்டுமா?"

"கேள் மீனு!"

"அவள் உங்கள் மேல் காதல் கொண்டதற்கு நீங்க எப்படிப் பொறுப்பாகமுடியும்?"

"நீ சொல்றது கரெக்ட் மீனு.!"

"சரி.சாப்பிட வாங்க!"

"நாளைக்குச் சனிக்கிழமை தானே.கொஞ்சம் லேட்டா சாப்பிடலாம்.முரளிக்குப் பாடம் சொல்லிக் கொடு.உனக்கு தான் பொறுமை ஜாஸ்தி"

"இதைச் சொல்லியே நீங்க தப்பிச்சுக்கறீங்க.உங்க மனசுல எப்பவும் தேவையில்லாத எண்ணம் ஓடிண்டே இருந்தா பொறுமை எப்படி வரும்?"

"மீனு! நம் மனசுல வரும் எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?"

"ஏன் முடியாது?"

"அப்படின்னா கொஞ்ச நேரம் முன்னால் 'பெண்கள் ஒருத்தரை மனசுல நினைச்சுட்டா மறக்கவே மாட்டா'ன்னு சொன்னது?"

"நன்னா மடக்கறீங்க.அதை யார் காதலிக்கறாளோ அவாகிட்டே 
கேளுங்கோ"

மீனு  முரளிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

இரவு சாப்பிட்டுவிட்டுப்
படுத்த ரகுவுக்குத் தூக்கம் வரவில்லை.

பக்கத்து வீட்டை வாங்கியது யார் எனத் தெரிந்து கொள்ள உள்ளம் துடித்தது.

'நான் ஏன் அவளைப் பற்றி நினைக்க வேண்டும்?கண்ணீருடன் அவள் காதலைச் 
சொன்னதாலா?பெண்களின் கண்ணீரை யாரால் மறக்கமுடியும்?"

பலவிதமாக எண்ணியபடி ரகு தூங்கிப்போனான்.

காலையில் காபி 
சாப்பிட்டு விட்டுக் காய்கறி வாங்கிவரக்கிளம்பினான்.

அடுத்த ஃப்ளாட்டைப் பார்த்தான்.

கதவு மூடியிருந்தது.

அரைமணியில் திரும்பி வரும்போது கதவு திறந்திருந்தது.

உள்ளே பார்த்தான்.

வெண்ணிலா!

ஆனந்த அதிர்ச்சி!

அவளும் ரகுவைப் பார்த்துவிட்டு பரபரப்புடன் எழுந்தாள்.

"ரகு!வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்!உள்ளே வாங்க.நீங்க எப்படி இங்கே?"

"ஹலோ வெண்ணிலா! எனக்கும் சர்ப்ரைஸ் தான்.பக்கத்து ஃப்ளாட் தான் எங்களோடது.என் ஒய்ஃப் நேத்தே உங்க பேர் சொன்னதும் உங்க நினைவு தான் வந்தது."

"ரொம்ப சந்தோஷம்.அப்பா.இவர் என்னோட ஆபீஸ்ல ஒர்க் பண்ணியிருக்கார்.பேர் ரகு"

"நல்லதா போச்சு.பேச்சுத்துணையாச்சு.உட்காருங்க தம்பி.இருங்க.காபி கொண்டுவரச் 
சொல்றேன்"

உள்ளே சென்றார்.

"நான் ஒரு தப்புப் 
பண்ணிட்டேன்.நேத்து தான் நம் பழைய கதையெல்லாம் மீனுகிட்டே சொல்லிண்டிருந்தேன்.இத்தனை வருஷம் கழிச்சு நாம் 'மீட்'பண்ணுவோம்னு எனக்கு எப்படித் தெரியும்?"

"பரவாயில்லை ரகு.உண்மையைத்தானே சொல்லியிருக்கீங்க?எனக்கொண்ணும் வருத்தமில்லை"

"நிலா! உங்களுக்குள் ஏன் "டைவர்ஸ்" ஆச்சு?"

"பிடிக்காத வாழ்க்கையை யாரால் வாழமுடியும் ரகு?அப்பாவுக்காகப் பண்ணின்ட கல்யாணம். எனக்காகப் பண்ணின்ட "டைவர்ஸ்".

வெண்ணிலா முகத்தில் பேரமைதியைப் பார்த்தான் ரகு.

சற்று நேரத் தயக்கத்திற்குப் பின் ரகு மனதில் 
இருந்த கேள்வியைக்கேட்டான்.

"நிலா! பிடிக்காதென்று தெரிந்தே கல்யாணம் செய்துகொள்வது ஒருத்தர் வாழ்க்கையைக் கெடுப்பது போல் இல்லையா?"

"ரகு!கல்யாணம் பண்ணிக்கிற எல்லாருமே பிடிக்கும்னு நம்பிதான் பண்ணிக்கறா.நானும் அப்படித்தான். தனிமை எனக்கு மட்டும் பயமாய் இருக்காதா?"

நிலா! எனக்கு ஒரு உதவி பண்ணமுடியுமா?"

"என்ன?"

"நாம் தெரிந்தவர் போல் காட்டிக் கொள்ள வேண்டாம்.அப்பாவிடமும் சொல்லிவை."

"சரி.உங்க ஒய்ஃப் நல்ல அழகு. எத்தனை குழந்தைங்க?"

"ஒரு பையன் தான். 5வயசு நடக்கறது."

அதற்குள் நிலாவின் அப்பா கொண்டுவந்த  காபியைக் குடித்துவிட்டுப் புறப்பட்டான் ரகு.

அவன் போனபின் நிலா 
அப்பாவிடம்

"அப்பா! நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து 'ஒர்க்' பண்ணியிருக்கோம்னு யாரிடமும் சொல்லாதீங்க"

"சரிம்மா.நான் யார் கிட்டே சொல்லப்போறேன்."என்ற நடேசனின் மனம் ஏதேதோ கற்பனை பண்ணிற்று.

ரகு உள்ளே தன் வீட்டின் உள்ளே நுழைந்து உட்கார்ந்தான்.

"பக்கத்து ஃப்ளாட் வாங்கினது உங்க நிலாவான்னு பார்த்தீங்களா?"

"என்னோட வேலை பண்ண பெண் இல்லை.

ரகு சொன்னதைக் கேட்ட மீனாவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

"இப்போ உங்களுக்கு நிம்மதி தானே.உங்க நிலா எங்கியோ சௌக்யமா இருக்கான்னு சந்தோஷமா இருங்கோ."

ரகுவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

"ஏன் ஏதோ பறி கொடுத்த மாதிரி 
இருக்கீங்க.பர்ஸ்
தொலைஞ்சுடுத்தா?அப்படியே தொலைஞ்சாலும் அதில் ஐநூறு ரூபாய் இருந்தா ஐநூறு ரூபா தொலைஞ்சுதுன்னு தான் கவலைப்படணும்.அஞ்சு லட்சம் தொலைஞ்ச மாதிரி கவலைப்படலாமோ?வாழ்க்கைலயும் அததுக்கு கவலைப்படறதுக்கு அளவிருக்கு.கவலை இல்லாதவா 
யார் இருக்கா?"

"மீனா!நீ எவ்ளோ 
நன்னா பேசறே தெரியுமா?"

"அப்டின்னா நிஜமாவே பர்ஸ் தொலைஞ்சுடுத்தா?"

"எதுவுமே தொலையலை.நடந்து வந்த களைப்பு."

"இருங்கோ.காபி கொண்டுவரேன்"
சுவையான காபி 
சூடாகத் தொண்டையில் இறங்கியதும் ரகுவுக்கு மனம் லேசான மாதிரி இருந்தது.

"குழந்தை இன்னுமா தூங்கறான்?"

"ஆமாம்.குழந்தையா இருக்கும்போது தானே நிம்மதியா தூங்கமுடியும்?பெரியவாள் ஆனதும் தான் நாம் எது எதுக்கோ கவலைப்பட ஆரம்பிச்சுடறோமே.தூக்கம் எப்படி வரும்?"

"உண்மை தான் மீனு."

"நான் சொல்றனே தவிர நானும்தான் கவலைப்படறேன்.சில சமயம் எனக்கே ஆச்சர்யமா இருக்கும்.பக்கத்து வீட்டு வெண்ணிலாவையே எடுத்துக்குங்கோ.எத்தனை அழகாவும் அடக்கமாவும் இருக்கா.உத்தியோகம் வேற பண்றா.இவளை
அழகா வச்சுண்டு குடுத்தனம் பண்ணத் தெரியலையே அந்த முட்டாளுக்கு.ஆம்பிளைன்ற திமிர்.அவனுக்கென்ன...வேற கல்யாணம் பண்ணிப்பான்.ஆனா இவ வாழ்க்கை மட்டும் இப்படியே வீணாகணுமாக்கும்.இது என்ன நியாயம்.அவளும் மனுஷி தானே?ஆசாபாசங்கள் இருக்காதா?பாவம் நாலு வருஷமா தனிமையில இருக்கா."

"இந்தக் காலத்துல அவாளும் இஷ்டப்பட்டான்னா கல்யாணம் பண்ணிக்கறா."

"அப்படி தான் இருக்கணும்.அவாளைக் கல்யாணம் பண்ணிக்கறவாளை மனசாரப் பாராட்டறேன்.ஒரு பேச்சுக்குக் கேக்கறேன்.நீங்க வெண்ணிலா மாதிரி பெண்ணைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா?"

ரகு திடுக்கிட்டான்.

"மீனு! கார்த்தால என்ன அசட்டுக்கேள்வி?எனக்குப் பசிக்கறது.என்ன டிஃபன்?"

"எல்லாம் உங்களுக்குப் பிடிச்ச வெண்பொங்கல் தான்.இத்தனை நேரம் என்னைப் பாராட்டிட்டு ஒரு கேள்வி கேட்டதும் பதில் சொல்லாம நழுவறீங்க.ஆம்பளைங்க சுபாவமே நழுவறது தான்.காதலிச்சா கூட கல்யாணம்
பண்ணிக்கனும்னு காதலி அழுத்திச் சொன்னாதான் பண்ணிக்குவா.புத்தி ஏதோ மயக்கத்திலேயே இருக்கும்.உறுதியா முடிவெடுக்கமாட்டா."

"மீனு!அர்ச்சனை ப்ரமாதம்.தட்டைப் போடு."

ரகு கிளம்பிப் போனவுடன் சமையல் அறையில் இருந்து  நடேசன் மனைவி கமலா வந்தாள்.

"அடுப்புல எதையாவது வச்சுட்டா அந்தண்டை இந்தண்டை நகர 
முடியலை.காந்திப் போயிடறது.ஏம்மா நிலா!உன்னோட வேலை பண்ணவர்னு ஏதோ அப்பா கிட்டச் சொல்லிண்டிருந்தியே..ஏன் அதுக்குள்ள போயிட்டார்?பக்கத்து ஃப்ளாட் 
தானே?"

நடேசனும் நிலாவும் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்ன முழிக்கறீங்க?அவருக்குக் கல்யாணம் ஆயிடுத்தா?"

"அம்மா! அவருக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தையும் இருக்கு."

"ஹ்ம்.லோகத்துல எல்லாரும் கல்யாணம் பண்ணின்டு குழந்தை குட்டியோட இருக்கா.உனக்கு மட்டும் ஏன் இப்படித் தனிமரமா நிக்கணும்னு தலைல எழுதியிருக்கார் பகவான்?எத்தனையோ பெண்கள் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கறதில்லையா?நீ ஏன் பிடிவாதமா இருக்கே?நாலு வருஷமா இப்படி 
உன்னைப் பார்க்கச் சகிக்கலை."

'நான் முதலில் பண்ணிக் கொண்டதே 'இரண்டாவது' கல்யாணம் தான்.சாஸ்திர சம்பிரதாயம் இருந்தா தான் கல்யாணமா?எனக்கு எப்போ ரகுவைப் பிடிச்சுதோ அப்பவே அவரோட கல்யாணம் ஆயிடுத்து'

என மனசுக்குள் எண்ணிக் கொண்ட வெண்ணிலா

"அம்மா! நீ ஏன் வீணா கவலைப்படறே.அப்பா என் பேரைச் சரியாதா வச்சிருக்கார்.நிலாவுக்குத் "தேய்பிறை" முடிந்ததும் "வளர்பிறை" தானே?எனக்குக்  
கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் வந்தா
கட்டாயம் பண்ணிக்கறேன்"

"ஏதோ இந்த மட்டுமாவது சொன்னியே.சந்தோஷம்.அந்த பகவான் தான் கண்ணைத் தொறக்கணும்"

தான் சொன்ன பதில் நிலாவுக்கே வியப்பு ஏற்படுத்தியது.

'மீண்டும் ரகுவைப் பார்த்ததால் நம் 
மனதில் ஏதோ மகிழ்ச்சி ஏற்படுகிறதே?வாடிய செடியும் தண்ணீர் விட்டால் துளிர்ப்பது போலா? ஆனால்
அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டது.அவர் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது.அவருக்கு அப்போதே விருப்பமில்லை.அதனால் தான் பழைய கதையெல்லாம் யாரிடமும் சொல்லவேண்டாம் என்றாரோ?பக்கத்தில் இருந்து பார்க்கும் பாக்கியத்தையாவது பகவான் கொடுத்திருக்கார்'

பலவாறாக எண்ணிய வெண்ணிலா குளிக்கச் சென்றாள்.

நடேசனும் கமலாவும் தனித்திருந்தனர்.
"கமலா! இவா ரெண்டுபேரும் ஒண்ணா வேலை பார்த்தான்னு யார்கிட்டேயும் சொல்லிடாதே."

"ஏன்?"

"நிலாதான் அப்படிச் சொன்னா."

"எனக்குப் புரிஞ்சுடுத்து."

"என்ன?"

"நம்ப நிலா அந்தப் பையனை 'லவ்' பண்ணியிருக்கா.அவனுக்குப் பிடிக்கலையோ என்னமோ.நம் நிலாவுக்கு என்ன குறைச்சல்.அழகில்லையா படிப்பில்லையா குணமில்லையா?அவள் கதி இப்படி ஆயிடுத்தே"

"கமலா! ஒருத்தரை எதனால பிடிக்கறதுன்னு யாரால சொல்ல முடியும்?ஆனா அவனோட பேசிண்டிருக்கச்சே நிலா முகத்துல அத்தனை சந்தோஷம்."

"ஏன்னா! எனக்கு 
ஒண்ணு தோணறது."

"என்ன?"

"பேசாம நிலாவை அவனுக்கு ரெண்டாந்தாரமா குடுத்துட்டா என்ன?"

ரகுவும் மீனாவும் மதியம் சப்பிட்டாயிற்று. குழந்தை முரளிக்கும் ஊட்டியாயிற்று.

"மீனா!நான் தூக்கம் போடப்போறேன்.முரளியைப் பார்த்துக்கோ"

"நீங்க தூங்குங்கோ.நான் அவனை அழைச்சிண்டு வெண்ணிலாவைப் பார்த்து ஏதாவது வேணுமான்னு கேட்டுட்டு வரேன்.கதவைத் தாள் போட்டுக்குங்கோ"

போய்விட்டாள்

உள்ளே வந்து படுத்த ரகுவுக்கு
மனதில் இனம்புரியாத குழப்பமும் வேதனையும் ஏற்பட்டது.'வெண்ணிலா வாழ்க்கை இப்படியாகிவிட்டதே..'கண்ணில் வழிந்த நீர் கன்னங்களில் உருண்டு தலையலணையை நனைத்தது.

சற்று நேரத்தில் அப்படியே தூங்கிப்போனான்.

மீனா 'காலிங் பெல்'லை அடித்தாள்.

கதவைத் திறந்த வெண்ணிலா முகம் முழுக்க மகிழ்ச்சி!

 " வாங்க!வாங்க!வாடா செல்லக்குட்டி.என்ன பேர்?"

"முரளி"

"ஸ்வீட் நேம்"_என்று சொல்லி முரளியைத் தூக்கிக் கொண்டாள்.சாக்லெட் தந்தாள்.

அதற்குள் நடேசனும் கமலாவும் அறையிலிருந்து 
ஹாலுக்கு வந்தனர்.

"வாம்மா!நிலா நேத்து பார்த்ததா சொன்னா.நீங்கதான் பக்கத்து ஃப்ளாட்ல இருக்கீங்களா?ஆத்துக்காரர் வரலையா?"

"அவர் தூங்கறார் மாமி.சனி ஞாயிறு ரெண்டு 
நாளும் மத்திய யம் நன்னா தூக்கம் போடுவார்.மற்ற நாள்ள ஆபீஸ்ல எப்படித் தூங்காம இருக்கார்னு தெரியலை"

எல்லோரும் சிரித்து விட்டனர்.

"நன்னா பேசறியேம்மா.நீங்க பக்கத்துல இருக்கறது ரொம்ப சந்தோஷம்."

"புதுசா வந்திருக்கீங்க.ஏதும் வேணுமான்னு கேட்க வந்தேன்."

"எல்லாம் இருக்கும்மா. R.O.வாட்டர் ஃபில்டர் தான் போடணும்."

"எங்காத்துல போட்டவா நம்பர் தரேன்."

குழந்தையுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த வெண்ணிலாவைப் பார்த்த மீனாவின் உள்ளம் உருகியது.

விடைபெறும்போது
"தினமும் சாமனயங்காலம் வாங்க.பக்கத்து ஃப்ளாட் தானே"_என்றாள் வெண்ணிலா.

"நீங்களும் வாங்க"_மீனா

இரு குடும்பங்களும் நெருங்கிப் பழக ஆரம்பித்தாலும் ரகுவும் நிலாவும் தெரியாதவர் போலவே பழகினார்கள்.

நாட்கள் யாருக்காகவும் நிற்பதில்லை.

சில மாதங்களுக்குப் பின்...

ஒருநாள் இரவு...

குழந்தை முரளி சாப்பிட்டுவிட்டுத் 
தூங்கிவிட்டான்.

ரகுவும் மீனாவும் சாப்பிட்டுவிட்டு ஹாலில் அமர்ந்திருந்தனர்.

"ரகு!நிலாவைப் பத்தி என்ன நினைக்கறீங்க?"

"ஏன்?நல்லபெண்.அவளைக் கட்டிண்டவனுக்குத்தான் குடுத்து வைக்கலை.பாவம்.தனிமரமா நிக்கறா.."

"தனிமரம் நம்மோடு சேர்ந்தா தோப்பாயிடாதா?"

ரகு திடுக்கிட்டான்.

"மீனா! நீ என்ன சொல்றே?"

"எனக்கு எல்லாம் தெரியும்.மாமி சொல்லிட்டா.இந்த யோசனை சொன்னதே மாமிதான்.நானும் ரொம்ப நாள் யோசிச்சு கார்த்தால தான் மாமியிடம் சம்மதம் சொன்னேன்."

"எதுக்கு?"

"நிலாவை நீங்க கல்யாணம் பண்ணிக்க."

"என்ன உளர்றே!என் சம்மதம் வேண்டாமா?"

"எனக்காகச் செய்வீங்கன்னு தோணித்து.நீங்க வேற அவளை நினைச்சுக் கவலைப்படறேள்.இதிலென்ன தப்பு"

"மீனு! முட்டாளாட்டம் பேசாதே.அக்கறை வேற.காதல் வேற.ரெண்டையும் குழப்பிக்காதே.நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்."

"வாக்கு தவறின பாவம் வரும் எனக்கு"

"வரட்டும்"_சட்டென்று எழுந்த ரகு உள்ளே போய் படுத்துக் கொண்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம் மீனாவும் ஏதும் பேசாமல் வந்து படுத்துக் கொண்டாள்.

மறுநாள் இரவு 8மணி...

நிலா உள்ளே வந்ததைப் பார்த்த ரகுவும் மீனாவும் ஒருகணம் திடுக்கிட்டாலும் சமாளித்துக் கொண்டு

"வாங்க நிலா!உட்காருங்க" என்றனர்.

"சாரி ரகு!மீனா உங்கிட்டேயும் 'சாரி' கேட்டுக்கறேன்.எங்கம்மா உங்கிட்டே ஏதோ உளறியிருக்கா.என் மனதில் ஆசையெல்லாம் 
வறண்டு போய் ரொம்ப நாள் ஆயிடுத்து.எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.எனக்கு அதுக்குத் தகுதியும் இல்லை.நான் டெல்லிக்கு ட்ரான்ஸபர் வாங்கிண்டுட்டேன்.அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.உங்களோட இருந்த நினைவே எனக்குப் போதும்.நான் வரேன்"

நிலா போய்விட்டாள்.

ரகுவும் மீனாவும் 
ஏதும் பேசாமல் கண்ணில் வழிந்த நீரைத்துடைக்கவும் மறந்து வானத்தை வெறித்துப் பார்த்தனர்.

வானத்து நிலா இவர்களைப் பார்த்து ஏதோ சொல்வது போலிருந்தது.

இந்த நிலா நம்மோடு தான் இருக்கும்.

எப்போதும்.

Comments

Popular posts from this blog

ஆத்மா

கனவு

மன வாசனை