கானல் நீர்
"கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ.."_
நடேசன் காஃபியை
ரசித்துக் குடித்தபடி டி.வி.யில் வரும் காட்சியையும் இசையையும் ரசித்துக் கொண்டிருந்தார்.
"அட நாராயணா! காலங்கார்த்தால காதல் பாட்டு என்ன
வேண்டியிருக்கு!ஜெயா டி.வி.ல சுப்ரபாதம் போடுங்கோ!"_ என்றாள் பார்வதி!
"இதோ போட்டுட்டேன்!டி.வி.ய 'ஆன்' பண்ணா அந்தப் பாட்டு வரது!அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?"
"சரி! தொண தொணன்னு பேசாம கூடவே சொல்லிண்டு வாங்கோ!"
"பாரு!"
"என்ன?"
"காதுல கேட்டா போறாதா?அதுவுமில்லாம நீ 5 மணிக்கே எழுந்து குளிச்சுடறே!நான் 8 மணிக்கு தானே குளிப்பேன்?"
"எதாவது நொண்டி சாக்கு சொல்றதிலேயே இருங்கோ!காதல் பாட்டு வந்ததும் உடனே மாத்தாம அதை மட்டும் ரசிக்கத் தெரியறது!வயசுக்குத் தகுந்த புத்தி இருக்கணும்!"
"பாரு!நாம் எதை ரசிக்கிறோம் என்பதை நாமே முடிவு பண்ணிட்டா நாமே பகவான் என்றாகாதா?"
"இன்னிக்கு சந்திராஷ்டமம்!நான் வாயை மூடிண்டிருந்திருக்கணும்!பையனுக்கும்
பெண்ணுக்கும் கல்யாணமாகி பேரன் பேத்தி எடுத்த பின்னாடியும் உங்க கிட்டே மாட்டிண்டு முழிக்கறேன்!"
"நம்ம ரெண்டு பேர் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்து தானே கல்யாணம் பண்ணி வச்சிருக்கா பெரியவா!உன் பொண்ணு ரமா மாதிரி நாம் ஒண்ணும் காதல் கல்யாணம் பண்ணிக்கலையே...."
"ரமாவுக்கு என்ன குறைச்சல்?மாப்பிள்ளை ரங்கன் அவளை தங்கத் தட்டில் வைச்சு தாங்கறான்.பேரனும் பேத்தியும் முத்து மாதிரி இருக்கா!நம்ம சீனுவுக்கு தான் எப்போ குழந்தை பிறக்கும்னு தெரியலை!"
"ஜாதக பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கறவாளுக்கு ஏன் காலா காலத்துல குழந்தை பிறக்க மாட்டேன்றது?"
"இந்த வயசுல நான்
ஜோஸ்யம் படிக்கணுமா?"
"பாரு! எனக்கு ஜோஸ்யம் தெரிஞ்சாலும் உனக்கு அடங்கி தான் போயிண்டிருக்கேன்!மறந்துடாதே!"
"ரொம்ப வழியாதீங்க!மறுபடியும் தனிக்குடித்தனமாக்கும்!"
"பாரு! நீ எப்படி கல்யாணத்தன்னிக்குப் பார்த்த மாதிரியே இருக்கே!"
"அட ராமா!நிம்மதியா பூஜை பண்ண முடியலை!இதுக்கு தான் மனசை பக்தி மார்க்கத்துல செலுத்தணும்னு சொல்றது!"
"ஆத்துக்காரி மேல் ஆசையா இருக்கறது தப்புன்னு எந்த தர்ம சாஸ்திரம் சொல்றது?"
"ராமா! ராமா!சந்திராஷ்டமம்னு தெரிஞ்சும் உங்க கிட்டே பேச்சு குடுத்து மாட்டிண்டுட்டேன்! தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?"
சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரமா தன் குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தாள்.
முகம் அழுது வீங்கியது போலிருந்தது.இவர்களைப் பார்த்த கண்ணில் கண்ணீரும் எட்டிப் பார்த்தது!
ரமா முகத்தைப் பார்த்த பார்வதிக்கு ஒரு நிமிடம் நெஞ்சை அடைத்தது.
பெற்ற பெண்ணைப் பார்த்தாலே தாயால் என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியாதா?
6 வயது 8 வயது என்றாலும் குழந்தைகள் விவரம் தெரிந்தவர்கள்.அவர்கள் முன்னால் ஏதும் பேச முடியுமா?
"வாம்மா ரமா!சுட்டிப்பயலுகளா தாத்தாவோட 'கேரம்' விளையாடறீங்களா?"
"ஹை! கேரம்!"_மகிழ்ச்சியில் குதித்தபடி ரமணியும் ராதிகாவும் தாத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டனர்.
அப்பாவியான நடேசன் ரமாவைப் பார்த்து சிரித்தபடி அவர்களை
விட மகிழ்ச்சியுடன் விளையாடச் சென்றார்.
'பெற்ற பெண்ணே ஆனாலும் பெண்களின் துக்கம் ஆண்களுக்கு புரிவதில்லை!'
அவர்களுக்கு எப்போதும் தன் மகிழ்ச்சி தான் முக்கியம்!
இல்லாவிட்டால் உயிராய் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பெண்ணை இந்த நிலையில் குழந்தைகளுடன் அனுப்புவானா ரங்கன்?
தனியாக இருக்கும் பெண்ணின் அருகில் சென்று ஆதரவாக அணைத்துக் கொண்டாள் பார்வதி.
"சொல்லும்மா! என்ன நடந்தது?ரங்கனுக்கு உன் மேல் உயிராச்சே!ஏன் இப்படி குழந்தைகளோடு தனியா அனுப்பினான்?"
அம்மா சொன்னதைக் கேட்ட ரமாவின் கண்களில் மேலும் கண்ணீர் பொங்கி கன்னங்களில் வழிந்தோடியது!
"அதாம்மா எனக்கும்
புரியலை! கொஞ்ச நாளா விட்டேத்தியா இருக்கார்.சரியா பேசறது கிடையாது.நானும் எத்தனையோ முறை நெருங்கிப் போய் ஆசையா பேசினாலும் ஜடம் மாதிரி இருக்கார்.எத்தனை
யோசிச்சாலும் ஏன்னு புரியலை!அதான் உங்கிட்டே யோசனை கேட்கலாம்னு வந்தேன்."
பெற்ற வயிறு பற்றி
எரிந்தது...
"ஆஃபீஸ்ல கூட வேலை செய்யற பொண்ணு யாரையாவது பார்த்து மயங்கிட்டானா?"
"அட நீ வேறம்மா! ரதியே எதிர்ல வந்தாலும் மயங்க மாட்டாரும்மா!"
பார்வதிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
'மற்றது எதுவாயிருந்தாலும்
சரி பண்ணிடலாம்!'
"என்ன தாண்டி ப்ரச்னை?"
"வேதாந்தியா மாறிடுவாரோன்னு பயமா இருக்கும்மா!"
பார்வதிக்கு மீண்டும் அடி வயிற்றைக் கலக்கியது.
இரண்டு குழந்தைகளின் எதிர்காலம்?நெஞ்சம் பதறியது!
"ஆஃபீஸ் போகறாரா?"_பயந்த படியே கேட்டாள்.
"போறார்மா! அங்கே ஜெயராமன்னு ஒருத்தர் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்.அவரைப்பத்தி நிறைய சொல்வார்.அவர் கல்யாணமே பண்ணிக்கலை! ஆஃபீஸ் விட்டா தினமும் ஒவ்வொரு
கோயிலா பார்க்கப் போயிடுவார்!அவரோட சேர்ந்துண்டு இவரும் கோயில் கோயிலா போக ஆரம்பிச்சுட்டார்."
"இதென்னடி கூத்து?சம்சாரி எதுக்கு சாமியார் மாதிரி தினமும் கோயிலைச் சுத்திட்டு சுண்டல் வாங்கிச் சாப்பிடணும்?அப்படியே சாமியாரா போய்ட்டா பசங்க கதி?ஏண்டி!நீ அனுசரணையா நடந்துக்கறயோல்லியோ?"
"என்னம்மா இப்படிக் கேக்கற?பத்து வருஷம் குடித்தனம் பண்ணி
ரெண்டு பசங்களும்
இருக்கு!"
பார்வதியின் செல்போன் ஒலித்தது!
மாட்டுப்பெண் ரம்யா!
"அம்மா!உங்க பிள்ளை ரொம்ப நாளா "டைவர்ஸ்" கேட்டுண்டு இருந்தார்.இன்னிக்கு கிடைச்சுடுத்து!அவர் மனம் போல் ரெண்டாங் கல்யாணம் பண்ணின்டுட்டார்!"
பார்வதி அப்படியே தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்த ரமா அலறிய சத்தம் கேட்டு நடேசன் வேகமாக உள்ளிருந்து வந்தார்.
மயக்கமாகித் தரையில் விழுந்து கிடந்த மனைவி பார்வதியைப் பார்த்த நடேசன் நெஞ்சம் பதறியது!
சிறுசுகள் ரமணியும் ராதிகாவும் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருகில் சென்று தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டார்.மூச்சு வருவதைப் பார்த்ததும் நிம்மதி ஏற்பட்டது.ரமா கொண்டு வந்த தண்ணீரை முகத்தில் தெளித்ததும் பார்வதி கண் திறந்தாள்.
"என்னம்மா ஆச்சு?யார் போன் பண்ணா?"
"நம்ம மாட்டுப் பெண் ரம்யா தாங்க..."
"என்ன விஷயம்?நீ ஏன் மயக்கம் போட்டு விழுந்தே?"
"சீனு அவளை "டைவர்ஸ்" பண்ணிட்டானாம்!ரெண்டாங் கல்யாணம் வேற பண்ணின்டுட்டானாம்!"
"அட ராமா!ரம்யா தங்கமான பெண் ஆச்சே! கல்யாணம் ஆகி 5 வருஷம் தானே ஆறது!எத்தனையோ பேருக்கு 10 வருஷம் கழிச்சு குழந்தை பிறந்திருக்கு!நம்மிடம் ஒரு வார்த்தை சொல்லலையே! பெண் பாவம் பொல்லாதது!சீனு புத்தி ஏன் இப்படிப் போச்சு?"
"இனி பேசி என்ன ஆகப் போறது?நடந்ததை மாத்த முடியுமா?"
"இதுக்காக நீ மயக்கம் போடணுமா? நம் உடம்பை நாம் தான் பார்த்துக்கணும்.என்ன தான் சொந்தமா இருந்தாலும் மத்தவா பண்றதுக்கெல்லாம் நம் மனசை நோகடிச்சுண்டா ஒரு நாள் கூட சிரிக்க முடியாது!என்ன ரமா நான் சொல்றது?"
ரமா மையமாகச் சிரித்து வைத்தாள்.
"ரமா!அம்மாவுக்கு ஒண்ணுமில்லை!நீ கவலைப்படாதே!"
ரமா ஒரு கணம் தன் கணவனைப் பற்றிச் சொல்லலாமா என
யோசித்து 'வேண்டாம்' எனத் தீர்மானம் செய்தாள்.
'வயதானவர்களிடம்
நம் கஷ்டத்தை கூறாமல் இருப்பதே நல்லது.நம் கஷ்டம்
சரியாகும் வரை அவர்களுக்கும் கவலை...'
"அப்பா!நீங்க சீனுவைப் பார்த்து கேளுங்கப்பா!அம்மா!நான் வரேன்!"
மகளின் மனதைப் புரிந்து கொண்ட பார்வதி தலையை ஆட்டினாள்.
ரமா வந்து சென்று ஒரு வாரம் ஆயிற்று.
பார்வதிக்கு மனதில் கவலை அரித்துக் கொண்டே இருந்தது.
'கணவனிடம் எப்படி
மாப்பிள்ளை ரங்கன் 'சாமியார்' மாதிரி நடந்து கொள்வதைச் சொல்வது?சீனுவை
அனுப்பி ரங்கனை சரி பண்ணலாம்னு
பார்த்தா அவன் கதியே அதோ கதி ஆயிடுத்து!'
"பாரு!என்னம்மா எப்பவும் ஏதோ கவலையிலே இருக்கே? பெத்த பிள்ளையே ஆனாலும் அவா அவா வாழ்க்கையை அவா அவா தான் பார்த்துக்கணும்."தென்னை மரம் ஏறுகிறவனுக்கு எந்த மட்டும் கை கொடுக்க முடியுமோ அந்த மட்டும் தான் கொடுக்க முடியும்!அவனுக்காக நாம் மரம் உச்சி வரை ஏற முடியுமோ?கவலைப் படறதால் நம் உடம்பு தான் கெடும்!"
பார்வதி ரங்கன் போக்கு பற்றிச் சொன்னாள்.
"அட ராமா! குழந்தை பிறக்கலையேன்னு
கவலைப்படறோம்.அப்புறம் அவா வாழ்க்கை பற்றிக் கவலைப்படறோம்!இதெல்லாம் கண்ணெதிரே பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக்காம யாரும் இருக்கறதில்லை!என்ன விசித்திரம்!"
சொல்லிக் கொண்டிருக்கும்போதே சீனு உள்ளே நுழைந்தான்!
"ஏண்டா சீனு!ரம்யா சொன்னதெல்லாம்
உண்மையா?"
"உண்மை தான்பா!அவ பேசும்போது நான் பக்கத்திலே தான் இருந்தேன்!"
"என்னடா சொல்றே?ஒண்ணும் புரியலையே!"
"ரம்யாவுக்கு கல்யாண வாழ்க்கைல இஷ்டம் இல்லைம்மா!அப்பா அம்மா சொன்னதுக்காக கல்யாணம் பண்ணின்டிருக்கா?"
அட ராமா! அதான் குழந்தை பிறப்பு தள்ளிப் போயிண்டு இருந்துதா?ரம்யா சொல்லி தான் நீ வேற கல்யாணம் பண்ணின்டியா?"
இதெல்லாம் எங்க கிட்டே சொல்ல வேண்டாமோ?"
சீனுவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை!
"டேய் சீனு!நம்ம மாப்பிள்ளை விஷயம் தெரியுமோ?"
"தெரியும்மா!உங்க கிட்டே சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு..."
சரிடா!இப்போ உடனே நீ போய் நம்ம மாப்பிள்ளையைப்
பார்த்து "பெண் பாவம் பொல்லாது'ன்னு புத்திமதி சொல்லி மாத்திடு!"
'பெண் பாவம் பொல்லாததுன்னா
ஆண் பாவம்?'
மனதில் எழுந்த எண்ணத்தை அடக்கிய சீனு "சரிம்மா!" என்றான்.
வெளியில் வந்த சீனுவுக்கு அம்மா தன் இரண்டாம் மனைவி பற்றிக் கேட்கவில்லை என்ற எண்ணம் தோன்றியது.
'அவளும் ரம்யா மாதிரி இருந்துட்டா?மனைவி என்ற சொல்லுக்குத் தகுந்தவாறு இருந்தால் ஏன் யாராவது வேறு பெண்ணைப் பற்றி
எண்ணப் போகிறார்கள்!'
வெயில் சுள்ளென்று அடித்தது.
வண்டியை ஓட்டும்போதே ரங்கனிடம் எப்படிப் பேசவேண்டும் என எண்ணிப் பார்த்துக்
கொண்டான் சீனு!
இவனைப் பார்த்த ரங்கன் தாடியைத் தடவியபடி புன்னகை செய்தான்.
தனக்குத் தானே 'தெய்வீகப் புன்னகை' என்று எண்ணிக் கொள்வது போல் தெரிந்தது.
'தான் சொல்வதும் செய்வதும் தான் சரி' என்று வாழும் அதிமேதாவிகள்அதிகமாகிவிட்டார்கள்!நம் பேச்சு எடுபடுமா?''
"வா சீனு!ஆத்துல எல்லாரும் சௌக்யமா?"_கிண்டலாக கேட்பது போலிருந்தது சீனுவுக்கு!
"இந்தப் பக்கமா வந்தேன்.அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போலாம்னு..."
"சீனு!நீ எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும்!நானும் ரமாவும் ஒத்துமையா தானே
இருக்கோம்?"
"ஒண்ணா இருந்தா ஒத்துமையா இருக்கான்னு சொல்ல முடியாது!"
சீனு சொன்னது 'சுரீர்' என்று உரைத்தது ரங்கனுக்கு!
"அப்போ நான் ஒண்ணு சொல்றேன்!அதும்படி நீ செய்தால் நானும் ரமாவும் ஒத்துமையா இருக்கோம்!"
"என்ன?"
"நீ வேற கல்யாணம்
பண்ணின்டாலும் முதல் மனைவி ரம்யாவை உன்னோடு வச்சுக்கணும்!தாம்பத்யம் பிடிக்கலைன்னாலும் உன்னோடு வாழ்ந்துண்டு தானே இருந்தா ரம்யா?"
சீனு யோசித்தான்.
'ரம்யா இப்போதும் நட்பாகத்தான் இருக்கிறாள்.அதுவே நாளாக ஆக தாம்பத்யத்தில் கொண்டு விடாதா?'
"சரி!அவ மேல எந்தத் தப்பும் இல்லை!பிடிக்காத செயலை யார் தான் செய்வார்கள்?அவளே தான் என்மேல் பரிதாபப் பட்டு " ம்யூசுவல் டைவர்ஸ்" வாங்கித் தந்து அவளோட ஃப்ரண்ட் ராதாவைக் கல்யாணம் பண்ணிவச்சு தனிக்குடித்தனமும் வச்சா!"
கேட்டுக்கொண்டே வந்த ரமா
"சீனு!நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன்டா!அவனவனுக்கு ஒரு கல்யாணம் ஆறதே "ப்ரும்மப் ப்ரயத்தனமா" இருக்கு!எப்படியோ
எங்காத்துக்காரரை என்னோட சேர்த்து வச்சுட்டே!"
"அது இருக்கட்டும்!சீனு!
எனக்கு ஒரு சந்தேகம்!"
"என்ன?"
"ராதாவுக்கு தாம்பத்யம்
பிடிக்குமா பிடிக்காதான்றது இனிமே தானே உனக்குத் தெரியப்போறது?"
சிரிப்பலை பரவியது!
Comments
Post a Comment