ஆசை முகம்
"இந்தாங்கோ காஃபி!இதுக்கு தானே இத்தனை நாழி திருக்கழுக்குன்றத்து பட்சி மாதிரி காத்திண்டிருந்தேள்?"_என்றாள் பார்வதி.
"பாரூ! கார்த்தாலே காஃபி தரும்போது கொஞ்சம் சுமுகமா தரப்படாதா?"_ நடேசன்.
"சுமுகமா இருந்ததெல்லாம் போறும்!உங்க பையனோட சுமுகமா இருக்க ஒருத்தி வராளான்னு முதல்ல பாருங்கோ!"
"முரளிகென்ன?நல்ல படிப்பு!பேங்க்ல ஆஃபீஸரா இருக்கான்.பார்க்கவும் ராஜா மாதிரி இருக்கான்.வேளை வந்தா ஒரு ராணி வரப்போறா...என்ன
பக்தி கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு!"
"உங்களுக்கு இருக்கவேண்டிய பக்தியும் சேர்ந்து அவன்கிட்ட இருக்கு!"
"என்னம்மா சொல்றே?"
"முரளி எனக்கு முன்னாலேயே எழுந்து த்யானம் பண்ணின்டு இருந்தான்.நான் காஃபி தந்ததும் சாப்பிட்டுட்டு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு கிளம்பிட்டான்!"
"இந்த சனி பேங்க் உண்டாச்சே.."
"நானும் அதே தான் கேட்டேன்.லீவ் போட்டுட்டானாம்!எனக்கென்னவோ பயமா இருக்குங்க! தாடி வேற வளர்க்கிற மாதிரி இருக்கு!"
"ஏதாவது கற்பனை பண்ணின்டு கவலைப்படறதே உனக்கு வழக்கமா போச்சு!என்னையும்
ஒரு காஃபி கூட நிம்மதியா சாப்பிட விடமாட்டேன்ற..."
"பிள்ளையாத்துக்காரான்னா நாம் கல்யாண பேச்சு நாமே எடுக்கக் கூடாதுன்னு இருக்கா?முதல்ல எங்கண்ணா ஆத்துக்கு போய் ரம்யாவை நம்ம முரளிக்கு பேசி முடிச்சுட்டு வாங்கோ!"
"பாரூ!ரம்யா தான் முரளியை சுத்தி சுத்தி வரா!அவனுக்கு இஷ்டம் இருக்க மாதிரி தெரியலையே!சிரிச்சு பேசமாட்டேன்றானே...ரம்யா எத்தனை அழகு!தங்கமான குணம்!சி.ஏ.படிச்சுட்டு ப்ராக்டீஸ் பண்றா..பணம் கொட்டறது!யாருக்கு குடுத்து வச்சிருக்கோ!"
சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரம்யா உள்ளே நுழைந்தாள்!
"அத்தை!முரளி கார்த்தாலே பைக்ல
அத்தனை வேகமா எங்கே போயிண்டிருக்கார்?இன்னிக்கு பேங்க் உண்டாச்சே!"
"வாம்மா ரம்யா!கார்த்தாலே மகாலக்ஷ்மியே வந்த மாதிரி இருக்கு!"_ என்றார் நடேசன்.
"மகாலக்ஷ்மின்னு சொல்றதுக்கு பதில் மாட்டுப்பெண்ணுன்னு சொன்னா அதிகம் சந்தோஷம் மாமா!"
"பேஷா சொல்றேம்மா!நான்
சொன்னா ஆயிடுத்தா?முரளி சொன்னா அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்!உங்காத்துல சம்மதிப்பாளா?"
"மாமா!நான் ஒரே பெண்.நான் சொல்றது தான் சட்டம்!இன்னும் என்
கேள்விக்கு பதில் சொல்லலையே!"
"ரம்யா!முரளி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போறேன்னு சொன்னான்மா!லீவ் போட்டுட்டானாம்!ஆத்துக்கு நீயே அவனைப் பார்க்க அடிக்கடி வரே!அப்படியும் அவன் மனசு பகவானை தேடி தானே ஓடறது?"
"அத்தை!அதே பகவான் தானே என்னிடம் முரளி மேல் ப்ரியம் ஏற்படுத்தினார்?கடவுளை நம்பினோர் கை விடப்படார்!நீங்க நகருங்கோ! நானே என் காஃபியை கலந்துக்கறேன்!"
"ரம்யா!அண்ணா மன்னி ரெண்டு பேரும்
சௌக்யமா?சண்டை
ஒண்ணுமில்லையே.."
ரம்யா 'கலகல' எனச்
சிரித்து விட்டாள்.
"அத்தை!மத்தவா மாதிரி நீங்களும் அதை சண்டைனு முடிவு பண்ணிட்டேளா?
"டிஸ்கக்ஷன்" இல்லாம
வாழ்க்கை ஏது? அதெல்லாம் சண்டையாகுமா?"
"பார்க்கிறதுக்கு சண்டை மாதிரி தானே
இருக்கு? 'லவ்' பண்றவன் எப்போ பார்த்தாலும் முரளி மாதிரி 'சீரியஸ்' ஆகவே பேசிண்டிருந்தா அது
'லவ்' ஆகுமா?என்னமோம்மா!உன் சாமர்த்தியம்!"
அதே நேரம் முரளி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் அமர்ந்து
கொண்டு ஓர் இளம்பெண்ணுடன்
பேசிக் கொண்டிருந்தான்!
"ஆசை முகம் மறந்து போச்சே...இதை
யாரிடம் சொல்வேனடி தோழி!நேசம் மறக்கவில்லை நெஞ்சம்...!"
யாரோ அந்தப் பாடலை "காலர் ட்யூனாக" வைத்திருந்ததால் அவர் போன் 'ஆன்' செய்யும் வரை பாடல் திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்த அனைவருக்கும் கேட்டது.
பௌர்ணமிக்கு கிரிவலம் செல்லும் ஆண்களும் பெண்களுமாக நிரம்பி வழிந்தது பஸ்.
முரளியும் அமர்ந்திருந்தான்.
பாடல் அவனுக்கும் கேட்டது.
கிரிவலம் செல்பவர் எப்படி இந்தப் பாடலை "காலர் ட்யூன்" ஆக வைக்க முடியும்?
விரக்தியா அல்லது வேண்டுதலா?
'உலகம் பலவிதம்'
பஸ் புறப்பட்டது.
பாதி பேர் தூங்க ஆரம்பித்தனர்.மற்றவர் ஒருவர்க்கு ஒருவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
முரளி பர்ஸ் பத்திரமாக உள்ளதா என பேண்ட் பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ஓர் இளம் பெண் வானத்தையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தாள்.
'என்ன கண்டுபிடிக்க
பார்க்கிறாள்?ஆகாயம்
தான் 'சிதம்பர ரகசியம்'
ஆச்சே!நம் கவனம் சிதறக்கூடாது!'
'நமசிவாய நமசிவாய
ஓம் நமசிவாய...' பாடலை மனதுக்குள்
சொல்ல ஆரம்பித்தான்
முரளி!
திருவண்ணாமலை வந்துவிட்டது.
முரளி பஸ்ஸிலிருந்து இறங்கி கடையில் ஒரு
பெரிய கற்பூரம் கட்டி வாங்கிக் கொண்டு கோபுர வாசலுக்கு வந்து அங்கு எரிந்து கொண்டிருந்த பெரிய
வாணலியில் இட்டு
இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கி
வணங்கினான்.
"ஆசை முகம் மறந்து போச்சே...இதை யாரிடம் சொல்வேனடி
தோழி.."_ பாடல் கேட்டது!
முரளி திரும்பிப் பார்த்தான்.
பஸ்ஸில் பார்த்த இளம்
பெண்தான்.
முரளிக்கு சிரிப்பு வந்துவிட்டது!
"ஏன் சிரிக்கறீங்க?"
"ஆசை முகம் தான் மறந்து போச்சே!விட்டுட்டு அடுத்த வேலை பார்க்கலாமே!"
"ஆண்கள் தான் அப்படி!பெண்கள் பூ மாதிரி!ஒருமுறை தான்
பூக்கும்!"
முரளிக்கு யாரோ தன்னை தலையில்
சம்மட்டியால் அடித்தது
போலிருந்தது.
"புரியறது! ஐ யம் சாரி!"
"பரவாயில்லை!ஒருத்தர் மனசு இன்னொருத்தருக்கு புரியாது!"
"கிரிவலம் தானே!சேர்ந்து போலாமா?நடக்கும் வலி தெரியாது.நேரம் போவதும் தெரியாது.
ஐ யம் முரளி!"
"ஐ யம் மீரா!வாங்க போகலாம்!"
சற்று நேரம் நடந்தபின்
முரளி சொன்னான்..
"வாழ்க்கைப் பயணத்திலும் யாராவது கூட வரும்போது நன்றாகத்
தானே இருக்கும்?"
"மிஸ்டர் முரளி!ப்ளீஸ்!என் மனசை மாத்திவிடலாம்னு நினைக்காதீங்க!"
அன்று நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் முரளி மீராவுடன் தான் பேசிக்கொண்டிருந்தான்!
"முரளி! சீக்கிரம் சொல்லுங்க!ஏன் என்னை இங்கே வரச் சொன்னீங்க?"
"மீரா!நாம் கொஞ்சம் நிதானமாக பேசணும்.உங்களுக்கு ஏதாவது அவசர வேலை இருந்தா இன்னொரு நாள் பேசலாம்!"
"எங்க அப்பா அம்மா சொல்றதை தான் நீங்க சொல்லப் போறீங்க!எனக்கு இஷ்டம் ஏற்படும் போது நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.நிச்சயமா உங்க மேல் ஏற்படாது.ஏன்னு தெரியலை!ஆனா உங்களைப் பிடிச்சிருக்கு! என் மேல் அக்கறையா இருக்கறது தெரிஞ்சதால தான் உங்களோட பழகறேன்".
"இதெல்லாம் எனக்கும் தெரியும் மீரா!ஏனோ உங்களை தனி மரமா பார்க்க என் மனசு பொறுக்கலை.உன் அண்ணனா நினைச்சுக்கோ!சொல்றதைக் கேள்!"
"நீங்க கூட தான் கல்யாணம் பண்ணிக்கலை!சரி !என்ன சொல்லப் போறீங்க?"
"மீரா! 'கல்யாணம் பண்ணிக்கனும்'னு முதல்ல மனசில் எண்ணம் ஏற்பட்டா தானே அதற்கு வேண்டியவர் யார் எனக் கண்கள் தேடும்.மூடியிருக்க பெட்டிக்குள்ள ஏதும்
விழுமா?"
"என் மனசைத் திறந்த பகவான் தானே மூடவும் செய்யறான்?நான் என்ன செய்ய?"
"மீரா! பகவானை வேண்டினா மறுபடி திறப்பான்!அவனால் முடியாதது உண்டா?"
முரளியின் கண்களில் கண்ணீர் வழிந்ததைப் பார்த்த மீராவின் மனம் பதறியது!
"முரளி! யார் மீதோ எனக்கு ஏற்பட்ட அதே அன்பு உங்களுக்கு என்மீது ஏற்பட்டிருக்கு! இதற்கு காரணம் எதற்கு? இந்த அன்பை "டிஃபைன்' பண்ணவேண்டியதில்லை.நன்றாக இருக்கணும்னு நினைக்கிறது தான்
அன்பு!பகவானிடம் நாம் அதைத்தானே கேட்கிறோம்!நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.என் கணவர் எங்கேயோ இருக்கார்னு இப்போ தோணறது!"
மீராவின் கண்களிலும் கண்ணீர் பொங்கியது!
'சிறிது காலமே பழகியிருந்தாலும் எப்படி இப்படியொரு அன்பு ஒருவர் மேல் ஏற்படுகிறது?'
'அன்பு என்பது பகவான் நம் மனதில் ஒருவர் மீது ஏற்படுத்துவது!"இவரிடம் அன்பு கொள்"_ என்று யாரையாவது காட்டி யாரிடமாவது
அன்பு ஏற்படுத்த முடியுமா?
ஏன் ஏற்படுகிறதென்று புரிந்து கொள்ள முடியுமா?
ஏதும் பேசாமல் இருவரும் உட்கார்ந்திருந்தனர்
ரம்யா தானே காஃபி போட்டு நடேசனுக்கும் தந்தாள்.
"இந்தாங்கோ மாமா!செகண்ட் டோஸ் காஃபி!
"உன் அத்தை என்னை தினமும் "டோஸ்' விடறத்துக்கு இப்படி குடிச்சா தான் தாங்க முடியும்!"
"மாமா!அத்தையை ஒண்ணும் சொல்லாதீங்க!ஒவ்வொருத்தர் எப்படியெல்லாம் இருக்கா தெரியுமா?இன்னிக்கு நான் தான் சமையல்!"
"நல்லதா போச்சு!மனுஷனுக்கு ஒரு 'சேஞ்ச்' வேணுமோல்லியோ..."
"எனக்கும் ரெஸ்ட்! ரம்யா! உன் ஆஃபீஸ்?"
"என்ன பெரிய ஆஃபீஸ்! வாழ்க்கைக்காக தானே ஆஃபீஸ்!ஆஃபீஸுக்காகவா வாழ்க்கை?"
"இத்தனை அருமையான பெண்ணை கல்யாணம் பண்ணிக்க முரளிக்கு குடுத்து வைக்கலையே!பகவானே!நீ தான் அவன் மனசை மாத்தணும்!"
"மாத்திட்டார்மா!நான் ரம்யாவை சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கறேன்!"
சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் முரளி!
Comments
Post a Comment